போதைப் பொருள் குற்றச்சாட்டில் சிறைக்காவலருக்கு ஆயுள் தண்டனை உத்தரவு..!
ஹெரோயின் போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றத்திற்காக, முன்னாள் சிறைச்சாலைக் காவலர் ஒருவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சாமர நிஷாந்த குமார, சிறைச்சாலைக் காவலராக பணியாற்றிய காலத்தில் 4 கிராம் மற்றும் 4 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை சிறைச்சாலைக்குள் கடத்த முயன்ற நிலையில், சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஆயுள் தண்டனை உத்தரவு
இதனைத் தொடர்ந்து, அவர் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். குற்றவாளிக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகளின் பேரில் சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்த நிலையில், கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன இந்த தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.
அதன் பின்னர் நடைபெற்ற நீண்ட வழக்கு விசாரணையின் முடிவில் குறித்த நபர் கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வைத்திருந்த மற்றும் கடத்திய முதல் மற்றும் இரண்டாவது குற்றச்சாட்டுகளில் குறித்த நபர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான மற்றொரு குற்றச்சாட்டிற்காக, குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த நபர் இன்றைய தினம் வெலிக்கடைச் சிறைச்சாலையின் ஆயுள் கைதிகள் தடுத்து வைக்கப்பட்ட சிறைக்கூடத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.