சிறைச்சாலை பேருந்தில் நாடாளுமன்றம் வரும் ஒருவர் கூறும் பொய்! அமைச்சர் விளக்கம்
சிறைச்சாலை பேருந்தில் நாடாளுமன்றத்திற்கு வந்து இறங்கும் சிலர், வரவு செலவுத் திட்டம் தொடர்பில் விமர்சிப்பதற்காக பல பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர் என வர்த்தகத் துறை அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் பல்வேறு விதமான விளக்கங்களை முன்வைக்க முயற்சிக்கின்றனர். ஆரம்பத்திலேயே எதிர்க்கட்சித் தலைவரும் இந்த வரவு செலவுத் திட்டத்தைப் புரிந்து கொள்வதில் தடுமாறியதை எங்களால் காண முடிந்தது.
பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர்
ஜனாதிபதி சுமார் 5 மணித்தியாலங்கள் உரையாற்றிய போதும், அதில் முன்வைக்கப்பட்ட விடயங்களைப் புரிந்து கொள்வதில் எதிர்க்கட்சியினர் சிரமப்பட்டனர்.
நாட்டைக் கட்டியெழுப்பும் பணியை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சரியான முறையில் முன்னெடுத்து வருகின்றது என்பதை இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகவும் நாம் நிரூபித்துள்ளோம்.
சமூக மறுசீரமைப்புக்களுக்குத் தேவையான பல்வேறு முக்கியமான முன்மொழிவுகளை நாம் முன்வைத்துள்ளதுடன், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளையும் செய்துள்ளோம்.
இந்த நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் ஒவ்வொன்றாக விளக்கமளிக்க எங்களால் முடியும்.
அதேவேளை, மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக எடுக்கப்பட்ட தீர்மானங்கள், அவற்றின் அளவு மற்றும் அரச ஊழியர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு நாம் வழங்கியுள்ள சலுகைகள் குறித்தும் விளக்கமளிக்க முடியும்.

இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு நாம் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்பதைத் தெளிவுபடுத்துவதே எமது நோக்கமாகும்.
எனினும், எதிர்க்கட்சியினரின் நிலைமை என்னவென்றால், வரவு செலவுத் திட்டத்தை விமர்சிப்பதற்காக ஏதாவது ஒரு விடயத்தைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்.
சிலர் சிறைச்சாலை பேருந்தில் வந்து இறங்கிய பின்னரும் பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.