எரிபொருள் சிக்கல் - பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்திற்கொண்டு பாடசாலைகளின் தினசரி நிர்வாக மற்றும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் கல்வி அமைச்சு சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவின் கையொப்பத்துடன் இது தொடர்பான முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நடைமுறைகள் இன்று (17) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டிற்கு மீண்டும் எரிபொருள் கிடைப்பதில் பெரும் சிக்கல்! மோசடி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
சுற்றுலாக்கள் மற்றும் எதிர்காலத்தில் திட்டம்
அதன்படி. பாடசாலை மாணவர்களின் பங்கேற்புடன் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த கல்விச் சுற்றுலாக்கள் மற்றும் எதிர்காலத்தில் திட்டமிடப்படவுள்ள அனைத்துச் சுற்றுலாக்களும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பாடசாலைகளில் நடத்தப்படும் விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகளின் போது எரிபொருள் பாவனையைக் கட்டுப்படுத்துமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, அதிகளவில் எரிபொருள் செலவாகும் வாகனப் பேரணிகள் (Vehicle Parades) போன்றவற்றை நடத்துவது தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
புதன்கிழமை பாடசாலை விடுமுறை தினமாக அறிவிப்பு
மேலும், தற்போது நிலவும் சூழலால் பாடசாலைகள் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே இயங்கும். இதன்படி, மீண்டும் அறிவிக்கும் வரை ஒவ்வொரு புதன்கிழமையும் பாடசாலை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமைகளில் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே சுயகற்றல் (Self-learning) செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான மேலதிக பயிற்சிகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்க அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் நிலைமை சீரடைந்ததும் பாடசாலைகளை வழமைப் போல நடத்துவது குறித்த மேலதிக அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தாமதமாகும் எரிபொருள் கப்பல்கள்! சிங்கள-தமிழ் புத்தாண்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம்