கிண்ணியா வலய அதிபர், ஆசிரியர்கள் எரிபொருள் கோரி வேலை நிறுத்தம் ( Photo)
இதனால் கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம்,முள்ளிப்பொத்தானை, குறிஞ்சாக்கேணி என மூன்று பிரிவுகளில் காணப்படும் பாடசாலைகளுக்கு கடந்த இரு வாரங்கள் விடுமுறை வழங்கப்பட்ட போதிலும் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆசிரியர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர்.
அதிபர், ஆசிரியர்களின் தீர்மானம்
இது தொடர்பில் அதிபர்கள் சங்கத்தலைவர் எம்.எம். முஸம்மில் கருத்து தெரிவிக்கையில்,
“அதிபர், ஆசிரியர்களுக்கு பெட்ரோல் கோரி பாடசாலைக்கு செல்வதில்லை என்று நேற்று (24) நடைபெற்ற அதிபர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக வாட்சப் மூலம் ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தி சகல ஆசிரியர்களும் அதிபர்களின் கையடக்க தொலைபேசிகளுக்கு "பெட்ரோல் இல்லாமையால் பாடசாலைக்கு வரமுடியவில்லை" என்று குறுஞ்செய்தி அனுப்புவதென்றும் பாடசாலைக்கு அண்மையில் உள்ள ஆசிரியர்கள் சுகவீன விடுமுறை எடுப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதிபர்கள் தங்கள் கோட்டக்கல்வி பணிப்பாளர்களுக்கு " பெட்ரோல் இன்மையால் பாடசாலைக்கு வரமுடியவில்லை" என்று குறுஞ்செய்தி மூலம் விடுமுறை அறிவிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
கல்வி அத்தியாவசிய சேவையாக பிரகடனம்
அதிபர் ,ஆசிரியர்கள் தொடர்ந்து எரிபொருள் நிலையங்களில் அவமானப்படுத்தப்பட்டு வருகின்றார்கள் எனவே கல்வி அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.
இல்லையென்றால் அதிபர், ஆசிரியர்கள் எரிபொருட்களை பெற்று கொள்வதற்கு பிரத்தியேக வசதிகளை செய்து தர வேண்டும்” என தெரிவித்துள்ளார் .
இதேவேளை, மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்படக்கூடாது என
பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.