நீதிபதி சரவணராஜா விவகாரம் அரசின் இன அழிப்பை அம்பலப்படுத்துவதற்கு கிடைத்த முக்கிய சந்தர்ப்பம்: அ. யோதிலிங்கம்
பல்வேறு அழுத்தம், நிர்பந்தம் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகிய நீதிபதி சரவணராஜா விவகாரம் அரசின் இன அழிப்பு நிகழ்ச்சி நிரலை அம்பலப்படுத்துவதற்கு தமிழ் தரப்பிற்க்கு கிடைத்த முக்கிய சந்தர்ப்பம் என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குனருமான சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்று (06.10.2023) ஊடகங்களுக்கு அனுப்பிய செய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா பதவி விலகல் பலத்த அதிர்வுகளை இலங்கையில் ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் கௌரவத்தை தலைகீழாகப் புரட்டிய விவகாரம் என்பதால் அரசாங்கம் ஆடிப்போயுள்ளது. எல்லாவற்றையும் நீதிச்சேவை ஆணைக்குழுவின் பொறுப்பில் விட்டு விட்டு அரசாங்கம் ஒதுங்க நினைக்கிறது.
சுயாதீன விசாரணை ஒன்றிற்கு அரசாங்கம் தயாராக இல்லை. சுயாதீன விசாரணை இடம் பெற்றால் அச்சுறுத்தல் இருந்ததா? சட்டமா அதிபர் நீதிமன்றின் கட்டளைகளை வாபஸ் பெறும்படி கேட்டாரா? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டி ஏற்படும். நாடாளுமன்றத்தில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் பகிரங்கமானது.
மேன்முறையீடு வழக்குகள் பகிரங்கமானது
மேன்முறையீடு வழக்குகள் பகிரங்கமானது. இவற்றையெல்லாம் சுயாதீன விசாரணை நடக்கும் போது அரசாங்கத்தினால் மறைக்க முடியாது. சட்டமா அதிபரின் அழுத்தம், பாதுகாப்புக் குறைப்பு, புலனாய்வுப் பிரிவினரின் கண்காணிப்பு என்பன தான் விசாரிக்கப்பட வேண்டிய விடயங்கள்.
அவற்றிற்கு போதிய ஆதாரம் இல்லாமல் நீதிபதி சரவணராஜா அதனைக்கூறியிருக்க மாட்டார். இந்த அச்சுறுத்தல்கள் தமிழ் நீதிபதிகள் புதிதாக சந்திக்கின்ற விடயமல்ல. ஏற்கனவே பலருக்கு அந்த அனுபவம் உண்டு.
சிறீநிதிநந்தசேகரன் , விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இந்த அனுபவங்கள் கிடைத்தன. இளஞ்செழியனுக்கும் கிடைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் பதவிக்காலத்தின் போது அதனை பெரியளவிற்கு பகிரங்கத்திற்கு கொண்டு வந்து பேசுபொருளாக்கவில்லை. சரவணராஜா தான் அதனை பேசுபொருளாக்கியுள்ளார்.
அதற்கான காலமும் சூழலும் அதற்கு பொருத்தமாக இருந்தது. தனது வழக்குகள் தொடர்பாக தானாகவே நீதிபதி சரவணராஜா சட்டமா அதிபரைச் சந்தித்தார் என நீதியமைச்சர் கூறுகின்றார். இங்கு தானாக சென்றாரா? அழைப்பின் பேரில் சென்றாரா? என்பது முக்கியமான விடயமல்ல. அவை இரண்டாம் பட்சமான விடயங்கள்.
சட்டமா அதிபர் அழுத்தம் கொடுத்தாரா? இல்லையா என்பது தான் முக்கியமான விடயம். இதற்கு சரியான பதில் இன்னமும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.





23 வயதில் ரூ. 250 கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை!! யார் தெரியுமா? Cineulagam
