பிரதமர் பதவியை ரணிலுக்கு கொடுக்கும் போது கோட்டாபய கூறிய தகவல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கியபோது நாட்டை பொறுப்பேற்று பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண நடவடிக்கையெடுக்குமாறு கேட்டுக்கொண்டார் என ஐக்கியத் தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்ற நோக்கத்தை தற்போது படிப்படியாக நிறைவேற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்பை படிப்படியாக நிறைவேற்றும் ரணில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காகவே நாட்டை பொறுப்பேற்றார். அவர் தற்போது தமது பொறுப்பை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார்.
நாட்டில் தற்போது எரிபொருள் வரிசை சமையல் எரிவாயு வரிசை இல்லாதொழிக்கப்பட்டு வழமையான நிலை திரும்பியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கியபோது நாட்டை பொறுப்பேற்று பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண நடவடிக்கையெடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
நாட்டைப் பொறுப்பேற்பதற்காக அவர் பல கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். எவரும் அதற்கு பதில் வழங்கவில்லை.
அதனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அவர் நாட்டை கையளித்துள்ளார் என்றும் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
அதேவேளை, உர நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.