தொழிற்கல்வி அவசியத்தை எடுத்துரைத்த பிரதமர் ஹரிணி
வலுவான தொழில்நுட்பம், தொழிற்கல்வி மற்றும் பயிற்சி முறைமையானது (TVET), தனிநபர்களுக்கு நடைமுறைச் சாத்தியமான மற்றும் எதிர்காலத்திற்குத் தேவையான திறன்களைப் பெற்றுக்கொடுப்பதுடன், பசுமையான நிலையான எதிர்காலத்தை நோக்கிய புத்தாக்கங்களை உருவாக்கவும் வழிவகுக்கும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸின் கொழும்புத் திட்ட உத்தியோகத்தர் கல்லூரி (CPSC) மற்றும் இலங்கையின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“காலநிலைத் தன்மைகளுக்குத் தாக்குப் பிடித்தல் மற்றும் பசுமை வேலைவாய்ப்புகளுக்காக TVET முறைமைகளை மாற்றுதல்“ எனும் தலைப்பில் இந்த மாநாடு நேற்று(24.03.2026) கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
தொழிற்கல்வி
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"மார்ச் 23 முதல் 27 வரை நடைபெறும் 'டிஜிட்டல், பசுமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்திற்காக TVET முறைமையை உருமாற்றுதல்' எனும் ஐந்து நாள் பிராந்திய வேலைத்திட்டத்தின் முக்கிய அங்கமாக இம்மாநாடு அமைகின்றது.

அதில் பூட்டான், பீஜி, மலேசியா, மாலைதீவு, மியன்மார், நேபாளம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய கொழும்புத் திட்ட உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, காலநிலை மாற்றம் மற்றும் பசுமைத்திறன் மேம்பாடு குறித்த உயர்மட்டக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதிலும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதிலும் TVET முறைமை முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்தத் துறையில் முறையான மாற்றங்களை ஏற்படுத்துவது இலங்கையின் தேசிய முன்னுரிமையாகும். கல்வி என்பது வெறும் அறிவைப் பரப்புவதுடன் நின்றுவிடாது, அது தனிநபர் வாய்ப்புகள், கௌரவம் மற்றும் சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் ஆற்றலைப் பெற்றுக்கொடுப்பதாக அமைய வேண்டும்.

பாடத்திட்டங்களில் பசுமைத் திறன்களை உள்ளடக்குதல், புதிய பயிற்சி வசதிகளில் முதலீடு செய்தல் மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைக் கல்வி முறையில் ஒருங்கிணைக்க வேண்டும்.
அதிலும் குறிப்பாக, பசுமை மாற்றத்தினால் உருவாகும் வாய்ப்புகள் இளைஞர்கள், இளம் பெண்கள், விசேட தேவையுடையோர் மற்றும் ஓரங்கட்டப்பட்ட சமூகங்கள் உட்பட அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பிராந்திய மற்றும் சர்வதேசப் பங்களிப்புகளுடன் நெருக்கமாகச் செயற்படுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர், அத்தகைய உறவுகளை உண்மையான நன்மைகளாகவும் செயற்திறன் மிக்க கூட்டுறவுகளாகவும் மாற்றுவதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, மேலதிக செயலாளர் சமந்தி சேனநாயக்க, கொழும்புத் திட்ட உத்தியோகத்தர் கல்லூரியின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் சுரேஷ் கே. தமேஜா மற்றும் பல உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
பிக்பாஸ் புகழ் தாமரைச் செல்வியிடம் பணம், நகை வாங்கி ஏமாற்றியுள்ள சீரியல் நடிகை கணவர்... அழுதபடி அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam