யாழில் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்ப பிரிவு பாடசாலை மீள்திறந்து வைப்பு
யாழில் (Jaffna) நீண்டகாலமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த மட்டுவில் ஸ்கந்தவரோதயா பாடசாலையின் ஆரம்ப பிரிவு, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் (Douglas Devananda) மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது, இன்று (20.05.2024) காலை இடம்பெற்றுள்ளது.
கடந்த மாதம் 12ஆம் திகதி குறித்த பாடசாலை சமூகத்தினரின் வேண்டுதலுக்கிணங்க களவிஜயம் செய்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் தினத்திலிருந்து (மே 20) யா/மட்டுவில் ஸ்கந்தவரோதயா மகாவித்தியாலயத்தில் ஆரம்பபிரிவு வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
அமைச்சரின் நடவடிக்கை
இதனடிப்டையிலேயே, இன்று குறித்த பாடசாலையின் ஆரம்ப பிரிவு இன்று சம்பிரதாய பூர்வமாக மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
யாழில் 150ஆவது வருடத்தை நெருங்கும் வரலாற்றை கொண்ட பாடசாலைகளுள் ஒன்றான யா/ மட்டுவில் மகாவித்தியாலயத்தில் முன்னதாக தரம் ஒன்று முதல் உயர்தரம் வரையிலான வகுப்புக்கள் இருந்து வந்துள்ளன.
ஆனால், சில வருடங்களாக பல காரணங்களால் இப்பாடசாலையில் ஆரம்ப பிரிவு வகுப்புக்கள் அதிகாரிகளால் இடைநிறுத்தப் பட்டிருந்தன.
இதையடுத்து, குறித்த பகுதி கல்வி சமூகத்தினர், நலன் விரும்பிகள் மற்றும் பெற்றோர் ஆகியோர் தமது பாடசாலையில் ஆரம்ப வகுப்புக்களை இடைநிறுத்தியமைக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்திருந்ததுடன் அவ்விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினது கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டது.
மீள ஆரம்பிப்பு
இந்நிலையில், இந்த பிரச்சினை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடியாக துறைசார் தரப்பினரது கவனத்திற்கு கொண்டுசென்று ஆரம்ப பிரிவு வகுப்புக்களை மீள முன்னெடுத்து செல்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதையடுத்து, இன்றையதினம் மட்டுவில் ஸ்கந்தவிரோதய பாடசாலையின் ஆரம்ப பிரிவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த பிரதேச கல்விச் சமூகம் மற்றும் பெற்றோர் சமூக ஆர்வலர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இந்த சமூக அக்கறையை பாராட்டி கௌரவித்துள்ளதுடன் தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |