அதிகாரம் இருக்கும்போது தலைக்கனம் அதிகரிக்கும் : ரோஹித அபேகுணவர்தன எம்.பி
அதிகாரம் கைவசம் இருக்கும்போது தலைக்கனம் ஏற்படுவதாகவும், அதிகாரத்தை இழந்த பின்னரே தமது தவறுகள் குறித்துச் சிந்திக்கத் தோன்றுவதாகவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
தாங்கள் தவறு செய்தால் அதனைத் தவறு என ஏற்றுக்கொண்டு உணரக்கூடிய மனப்பக்குவம் கொண்டவர்கள் எனக் குறிப்பிட்ட அவர், "அதிகாரம் கைவசம் இருக்கும்போது தலைக்கனம் அதிகரிக்கின்றது. அதிகாரம் கையை விட்டுச் செல்லும்போதுதான், 'நமக்கு என்ன நடந்தது?' எனச் சிந்திக்கத் தோன்றுகின்றது.
அதிகாரம் இருக்கும் இடத்தில் புத்தி இருப்பதில்லை, புத்தி வரும்போது கையில் அதிகாரம் இருப்பதில்லை" என்று தெரிவித்தார்.
வாய்ப்பு இல்லை
தற்போது ஆட்சியில் இருப்பவர்களிடம் உண்மையைச் சொன்னால், சாரைப்பாம்பு மீது மண்ணெண்ணெய் ஊற்றியது போலத் துடிக்கின்றார்கள் எனக் குற்றம் சாட்டிய அவர், கடந்த 30 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இருந்து மக்களுடன் பயணித்த அனுபவம் தமக்கு உண்டு என குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் ஆளும் தரப்பினருக்கு அதிகாரமும் நாடாளுமன்ற ஆசனங்களும் இல்லாத நிலை ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

நாட்டில் நிலவும் வரிச்சுமை குறித்துக் கடுமையாக விமர்சித்த அவர், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருமண விருந்துக்காக விடுதிக்குச் சென்று உணவருந்தும்போது கூட அந்த உணவுக்கும் 18 சதவீத பெறுமதி சேர் வரி விதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டினார்.
வியாபாரிகளுக்குச் செலுத்திய வரியை மீளப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புள்ளபோதிலும், சாதாரண நுகர்வோருக்கு அந்த வாய்ப்பு இல்லை என்றார்.
வரிச்சுமையின் தாக்கம் காரணமாக மக்கள் படும் துயரத்தைக் குறிப்பிட்ட அவர், திருமண விருந்துக்குச் சென்றுவிட்டு பின்னர் விவாகரத்து செய்ய வேண்டிய நிலைக்குச் சாதாரண மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்று நகைச்சுவை கலந்த தொனியில் தெரிவித்தார்.