பயங்கரவாதத் தடைச் சட்டம் வெகுவிரைவில் நீக்கப்படும் : நீதி அமைச்சர் திட்டவட்டம்
வெகுவிரைவில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும். தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (27) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மீளாய்வு செய்வதற்காக...
மேலும் உரையாற்றுகையில், வரவு - செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் விடயதானத்துக்குப் பொறுப்பற்ற வகையில் பேசுகின்றார்கள்.
விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்கின்றார்கள். இருப்பினும் ஒருசிலர் பொறுப்புடன் செயற்படுவது வரவேற்கத்தக்கது.
தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாங்கள் மறக்கவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று அன்றும் குறிப்பிட்டோம். இன்றும் குறிப்பிடுகின்றோம்.
அதேபோல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக கொண்டு வந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கும் நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்தோம்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் ஆகியவற்றை மீளாய்வு செய்வதற்காக நீதியரசர் (ஓய்வுநிலை) ஹர்ஷ குலரத்ன தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் கோட்பாடுகள்
குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த நடவடிக்கைகள் அடுத்த தேர்தல் வரை இழுத்துச் செல்லப்படமாட்டாது.
பூகோள பயங்கரவாதம் மற்றும் பூகோள நவீன சவால்கள் ஆகியவற்றை எதிர்க்கொள்ளும் வகையில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சட்டம் விரைவில் இயற்றப்படும்.
உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் கோட்பாடுகளுக்கு அமைவாகவே புதிய சட்டம் இயற்றப்படும். ஆகவே, இந்தச் சட்டம் இயற்றப்பட்டவுடன் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும்.
இந்த விடயத்தில் எவரும் அச்சம் கொள்ள வேண்டாம். பொலிஸ்மா அதிபருக்கும் பொலிஸ் ஆணைக்குழுவுக்கும் இடையில் முரண்பாடு, சட்டமா அதிபருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முரண்பாடு என்று எதிர்க்கட்சிகள் இன்றும் வங்குரோத்து அரசியலில் ஈடுபடுகின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் கடும் போட்டி நிலவுவதாகக் குறிப்பிட்டார்கள். ஆனால், அது இன்று பொய்யாக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அழுகும் உடல்கள்... சீரழிக்கப்பட்ட பெண்கள்: புலம்பெயர்ந்தோர் மீது மத்திய கிழக்கு நாடொன்றின் கொடூர முகம் News Lankasri

திருமணம் செய்து கடுமையாக பாதிக்கப்பட்டேன், என் கணவருடன் அதை வெளியிட்டால்.. பிரியாமணி எமோஷ்னல் பேட்டி Cineulagam
