வடக்கு மக்களின் வாக்குகளை உற்றுநோக்கும் தென்னிலங்கை அரசியல்
எதிர்வரும் சில நாட்களில் இலங்கையில் பாரிய அரசியல் மாற்றம் நிகழ்வதற்கான நகர்வு ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில் செப்டெம்பர் மாதத்திற்குப் பிறகு இலங்கையை ஆளப்போவது யார் என்ற கேள்வி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த மாற்றமானது பிரதானமாக 3 விடயங்களை அடிப்படையாக கொண்டதாக அமையும் என்பது இலங்கையின் கடந்த கால அரசியல் போக்குகளில் வெளிப்படையாகும்.
இதில் முதலாவது சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து வங்குரோத்தான நாட்டை பொருளாதார ரீதியில் மீட்ட தற்போதைய அரசாங்கத்தை இலங்கை வாக்காளர்கள் எப்படி நோக்குகின்றார்கள் என்பது.
தீர்மானம் மிக்க நகர்வு
இரண்டாவது, புதிய கட்டத்தை எட்டியுள்ள இலங்கை அரசியல் அரியாசனத்தில் அமரப்போகும் தலைமையை மக்கள் எவ்வாறு தீர்மானிக்கப் போகின்றனர் என்பது.
மூன்றாவது, அரகலயவிற்குப் பிறகு, குடும்ப பாரம்பரிய அரசியலுக்கு அப்பாற்பட்டு ஜனநாயக மற்றும் பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்தை விரும்பும் குடிமக்களின் வாக்கு பதிவு.
இவை மூன்றுமே இலங்கையின் அடுத்த 5 ஆண்டுகால அரசியலை தீர்மானிக்கும் தீர்மானம் மிக்க நகர்வுகளாகும்.
நடைபெறவுள்ள தேர்தலானது இலங்கை அரசியலில் பிரதானமிக்கவர்களாக கருதப்படும் ரணில், சஜித், அனுர மற்றும் நாமல் ஆகிய பிரதான 4 வேட்பாளர்களை உள்ளடக்கியுள்ளது.
இங்கு அரை பெரும்பான்மை ஒரு கட்சியின் வெற்றியை தீர்மானிக்கும் என்பது உறுதிபட தெரியவில்லை. இந்த நால்வரில் பெரும்பான்மையான நாடாளுமன்ற இடங்களை உருவாக்கி சொந்தமாக அரசாங்கத்தை அமைக்க முடியாது.
கட்சிகளுக்கு இடையிலான போட்டி
இவ்வாறானதொரு முடிவு இலங்கை சமூகத்தின் பிளவுபட்ட அரசியலின் தன்மையை பிரதிபலிக்க காத்திருக்கிறது. முதல் தேர்வில் வெற்றி பெறாத சூழ்நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணிய பின்னரே ஜனாதிபதித் தேர்தலின் முடிவைத் தீர்மானிக்க வேண்டிய நிலை தற்போது உருவாகியுள்ளது.
இந்த தேர்தலில் கட்சிகளுக்கு இடையிலான போட்டியானது பெரும்பான்மையான சிங்கள சமூகத்தின் வாக்குகளை வெல்வதில் முதன்மையாக கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது.
இதற்கமைய ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியாளரைத் தீர்மானிக்க வடக்கு - கிழக்கு தமிழ், மலையக தமிழ் மற்றும் முஸ்லீம் ஆகிய மூன்று பிரதான சிறுபான்மை மக்களில் வாக்குகள் முக்கியமானதாக அமையும்.
இந்த தத்துவத்தை முன்னதாக அறிந்த சஜித் மற்றும் அனுர தரப்பு 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி தமிழ் வாக்காளர்களை கவர வேண்டிய நகர்வை நகர்த்தியுள்ளன.
ஆனால் இங்கு சஜித் அல்லது அனுரவை தாண்டி தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மை வாக்குகளை ஈர்க்கும் சிறந்த அரசியல் அனுபவம் ரணில் விக்ரமசிங்கவுக்கு உண்டு என்பது ஆய்வாளர்களின் கருத்து.
இந்த அனுபவத்தின் ஒரு அங்கம் தான் மொட்டு தரப்பின் முக்கிய அங்கத்தவர்களை அரசியல் ஓட்டத்திற்கு இணைத்துக்கொண்டமை.
இரண்டாவது முஸ்லிம் தரப்பின் பிரதான தலைமைகள் ரணிலின் போட்டியாளர்களுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள போதிலும், அதற்கு அடுத்த மட்ட மற்றும் சில பிரதான உறுப்பினர்களை தம்முடன் இணைத்துகொள்வது.
கட்சித்தாவல் அரசியல்
அதுவே நேற்றைய அரசியலின் பேசுபொருளாக மாறிய அலி ஷாஹிர் மௌலானாவின் கட்சித்தாவல்.
அது ஒரு பக்கம் இருக்க தென்னிலங்கை அரசியலின் தேர்தல் பிரசாரங்களின் ஆரம்பம் என்னவோ வடக்கையே மையப்படுத்துகிறது.
சிறுபான்மை வாக்குகளை பெருமளவில் கொண்டுள்ள வடக்கு மக்களின் தீர்வென்பது தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு முக்கியமான ஒன்று.
இங்கு மலையக வாக்குகள் வழமைபோன்று இரண்டாக பிளவடைய கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகிறன. மலையகத்தின் பிரதான அரசியல் கட்சிகளான, தமிழர் முற்போக்கு கூட்டணியும், இலங்கை தொழிலாளர் காங்கிரசும் இரு பிரதானவேட்பாளர்களை ஆதரிப்பதே.
மேலும் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகள் என்பது தீர்மானம் மிக்க ஒன்று. அந்த வாக்குக்கள் இனம், மதம், மொழி, கருத்துக்கள் அனைத்தையும் கடந்து சிறந்த தலைமையை தீர்மானிக்க கூடியது.
இவர்களின் பிரதான அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மற்றும் ரிஷாட் பதியுதீன் தரப்புக்கள் சஜித்தை ஆதரிக்கின்றன. ஆனால் அக்கட்சி சார்பில் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் பிரதான தலைமைகள் ரணிலை ஆதரிக்க முன்வந்துள்ளனர்.
அத்தோடு கிழக்கு மக்களின் வாக்கு , ஒரு வேட்பாளரை மையப்படுத்துமாக அமையுமா என்பது கேள்விக்குறி. காரணம், மட்டக்களப்பு, திருகோணமலை திகாமடுல்ல தேர்தல் தொகுதிகளின் ஒரு சில பிரதான வேட்பாளர்கள் ரணில் மற்றும் சஜித் பக்கம் சார்ந்திருப்பதே.
ஆனால் இங்கு சிறுபான்மை வாக்குகளின் பிரதான இலக்கு வடக்கு என்பது இதில் இருந்து புலப்படுகிறது.
வடக்கின் ஆதரவு
தமிழ் பொதுவேட்பாளர் என ஒரு தலைமை நிலை நிறுத்தப்பட்டாலும், கட்சி சார்பிலான சில உறுப்பினர்கள் என்னவோ இன்று வரை தென்னிலங்கை அரசியல் தமைமைகளுடன் கலந்துரையாடி வருகின்றனர்.
இங்கு பிரதான கட்சியாக அங்கம் வகிக்கும் தமிழரசு கட்சி இதுவரை பேச்சுவார்த்தைகளை மாத்திரமே தொடர்கிறது. இதன் தொடர்ச்சி வடக்கின் ஆதரவு தேர்தல் வெற்றிக்கு பெரும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
பிவிதுரு எலவுறுமைய கட்சி தமிழ் தேசியத்திற்கு எதிரான கருத்துக்களை எடுத்துரைத்த எம்.பிக்களை உள்ளடக்கிய கூட்டணி. அனால் திலீத் ஜயவீரவை முன்னிறுத்தியதும் தாமும் வடக்கு நோக்கி நடையை கட்டுவதாக அறிவித்துவிட்டனர்.
இவற்றை அடிப்படையாக வைத்து மக்கள் வாக்கெடுப்பின் மூலம் ஒரு புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவார். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி, பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் அரசியல் சட்டப்பூர்வத்தன்மையை பெருமளவில் பெறுவார்.
இவ்வாறானதொரு பின்னணியில், நாட்டின் அரசியலையும், பொது வாழ்க்கையையும் சுத்தப்படுத்தி, மீளக் கட்டியெழுப்புவதற்காக, புதிய ஜனாதிபதி, பொதுமக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை தனது தோள்களில் சுமந்து செல்ல வேண்டும்.
புதிய ஜனாதிபதி
புதிய ஜனாதிபதி ஒரு சில சுமைகளையும் பெறுவார், அதன் அரசியல் மற்றும் சமூக எடை சில காலத்திற்கு மக்களின் வாழ்க்கை நிலைமைகளை விரைவாக மேம்படுத்துவதற்கான புதிய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலைக் கட்டுப்படுத்துவது கடந்த காலங்களை போல எதிர்காலங்களிலும் இடம்பெறலாம்.
பல ஆண்டுகளாக 37 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான வெளிநாட்டுக் கடன்களைத் தீர்ப்பது, வரவிருக்கும் ஜனாதிபதியின் எந்த உள்ளீடுகளும் இல்லாமல் ஒப்பந்தங்களின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள், புதிய ஜனாதிபதியின் பதவிக் காலம் முழுவதும் எடுத்துச் செல்வதற்கான ஒரு முக்கிய ஆயத்தமாக இருக்கும்.
இவற்றை கையிலெடுத்து செல்லும் ஜனாதிபதி யார் என்பதை செப்டெம்பர் 21 ஜனநாயகம் தீர்மானிக்கும்... இலங்கை அரசியல் புதிய பாதை தொடரும்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |