அனோஜனை இலங்கைக்கு அழைத்து வர ஜனாதிபதி விசேட நடவடிக்கை - அவசரமாக கூடிய முக்கியஸ்தர்கள்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞரான சிவராசா அனோஜன் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டமானது, நேற்று(21.09.2026) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவராசா அனோஜன் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படக்கூடிய இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
இளைஞரின் உயிரை காப்பாற்ற விடுக்கப்பட்ட பணிப்புரை
இளைஞரின் உயிரைப் பாதுகாப்பதற்காக எடுக்கக்கூடிய எதிர்கால நடவடிக்கைகளை உடனடியாகத் துரிதப்படுத்துவதுடன், சவூதி அரேபியாவின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அவசியமான இராஜதந்திரத் தலையீடுகளை மேற்கொண்டு தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பில் அரசு எப்போதும் சிறப்பு கவனம் செலுத்துவதை வலியுறுத்திய ஜனாதிபதி, இந்தச் சம்பவம் தொடர்பாக எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையில் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
இந்தக் கலந்துரையாடலில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுப், சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க ஆகியோருடன் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

