"புத்த பெருமானின் போதனைக்கு மாறுபட்ட கோட்டாபயவின் உரை"
“புத்த பெருமான் நடைமுறையுடன் வாழவேண்டும் ”என்று கூறியுள்ளபோதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உரையில் நடைமுறை பிரச்சினை பற்றி பேசப்படவில்லை.
அத்துடன் அது தொடர்பில் பதில்கள் வழங்கப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் எவ்வாறு பெருமையாக பேசமுடியும் என்று எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷமன் கிரியெல்ல கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், நாடாளுமன்ற அமர்வுகளை ரத்துச்செய்து, அந்தக்காலத்துக்குள் திருகோணமலையில் 80 எண்ணெய் தாங்கிகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கிரியெல்ல குறிப்பிட்டார்.
சர்வதேசத்தின் முதலீடுகளை பற்றி ஜனாதிபதி தமது உரையில் கூறியபோதும், ஜனநாயக பண்புகளை இல்லாதொழித்து விட்டு எவ்வாறு சர்வதேச முதலீடுகளை எதிர்பார்க்கமுடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அரசியலமைப்பு ஒன்றின் அவசியம் நாட்டுக்கு தேவையாக உள்ளநிலையில், அந்த அரசியலமைப்பை, ராஜபக்சர்களின் வழக்குகளில் முன்னிலையான சட்டத்தரணிகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது.
வழமையாக ஒரு அரசியல் அமைப்பு என்பது, நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றினாலேயே தயாரிக்கப்படவேண்டும் என்றும் லக்ஷமன் கிரியெல்ல குறிப்பிட்டார்.
