அபிவிருத்தியடைந்த தேசத்தைக் கட்டியெழுப்ப சகலரும் ஒன்றிணைவோம்! ஜனாதிபதி அழைப்பு
நாட்டின் அனைத்து மக்களும் பயன்பெறக்கூடிய அபிவிருத்தியடைந்த நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்காக, நாம் அனைவரும் சகோதரத்துவத்துடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் பெருமக்கள் மிகுந்த பக்தியுடனும் தியாகச் சிந்தனையுடனும் கொண்டாடும் புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஈத் முபாரக்
அந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மேலும்,
முஸ்லிம்களின் ஆழ்ந்த நம்பிக்கையின்படி, எல்லாம் வல்ல அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் அதியுச்ச பக்தியையும், இணையற்ற தியாகத்தையும் அடையாளப்படுத்தும் இந்த ஹஜ் கொண்டாட்டமானது, இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதியான புனித ஹஜ் யாத்திரையின் மூலம் தனித்துவம் பெறுகின்றது.
நெருக்கடிகளுக்கு மேல் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள தற்போதைய உலகச் சூழலில், மனிதர்களுக்கிடையில் நிலவ வேண்டிய பிணைப்பின் மகத்துவத்தைப் பற்றிய பரந்ததொரு முன்மாதிரியை ஹஜ் பெருநாள் உலகுக்கு வழங்குகின்றது.
தத்தமது தனிப்பட்ட அந்தஸ்துகளுக்கு அப்பாற்பட்டு, உலகின் நாலாதிசைகளிலிருந்தும் வருகை தரும் அனைத்து முஸ்லிம்களும் ஒரே இடத்தில் ஒன்றிணைந்து மத வழிபாடுகளை நிறைவேற்றும் இச்சந்தர்ப்பமானது, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் குறித்த உன்னதமான வழிகாட்டலை உலகுக்கு எடுத்துச் சொல்கின்றது என்று நான் திடமாக நம்புகின்றேன்.
மத்திய கிழக்கின் தற்போதைய யுத்த சூழ்நிலை காரணமாக முழு உலகமும் கடுமையான சவால்களை எதிர்நோக்கியுள்ள போதிலும், புனித மக்கா நகருக்கு யாத்திரை மேற்கொள்ளும் முஸ்லிம்கள், இப்ராஹீம் நபி அவர்கள் தனது வாழ்நாளில் வெளிப்படுத்திய எல்லையற்ற தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் மீண்டும் பறைசாற்றுகின்றனர்.
சுயநலத்துக்குப் பதிலாகப் பொதுநலம் மேலோங்கிய, அமைதியும் ஒற்றுமையும் நிறைந்த, பரஸ்பர ஒத்துணர்வுள்ள மனித சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதே எமது அரசின் முதன்மை நோக்கமாகும். அந்த உன்னதமான பயணத்தில், அமைதி, சகோதரத்துவம் மற்றும் தியாகத்தைப் பிரதிபலிக்கும் ஹஜ்ஜுப் பெருநாளின் உன்னத வழிகாட்டல்களை எமது அன்றாட வாழ்க்கைக்கு மென்மேலும் நெருக்கமாக்கிக் கொள்ளுமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.
உயர் ஆன்மீக விழுமியங்களால் இலங்கைச் சமூகத்தை மேலும் போஷித்து, நாட்டின் அனைத்து மக்களும் பயன்பெறக்கூடிய அபிவிருத்தியடைந்த நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்காக, நாம் அனைவரும் சகோதரத்துவத்துடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் எனச் சகலருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.
இந்நாட்டிலும் உலகெங்கிலும் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களுக்கும் எனது இதயம் கனிந்த 'ஈதுல் - அழ்ஹா' பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். ஈத் முபாரக் என குறிப்பிடப்பட்டுள்ளது.