நாட்டின் அரசியலமைப்புத் திருத்தங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வரலாற்றுப் பங்கு உண்டு! நிஸாம் காரியப்பர்
இலங்கையின் அரசியலமைப்பு வரலாற்றில் கொண்டுவரப்பட்ட முற்போக்கான திருத்தங்களுக்கு பின்னால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாரிய பங்கும் பங்களிப்பும் ஒளிந்துள்ளதாகக் கட்சியின் செயலாளர் நாயகமும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் விசேட பிரிவாக உருவாக்கப்பட்டுள்ள 'சட்டத்தரணிகள் அமைப்பின்' அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில் மருதமுனையில் அண்மையில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தம்
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசியலமைப்பு முறைமைகள் மற்றும் சட்டக் கட்டமைப்புகளுடன் மிக நெருங்கிய தொடர்புடைய ஒரு அரசியல் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகழ்கிறது. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் வழியேதான் எமது கட்சியின் எழுச்சியும் வரலாறும் ஆரம்பமானது.
அதனையடுத்துக் கொண்டுவரப்பட்ட 15 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் தேர்தல் வரம்பு 5 சதவீதமாக குறைக்கப்பட்டமையினால், வன்முறைப் பாதையிலிருந்து சிறுபான்மை இளைஞர்கள் விலகி அரசியல் வழியில் பிரவேசிக்க முடிந்தது.

நாடாளுமன்ற பிரதிநிதித்துவம்
இதனாலேயே சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற முடிந்தது. அதேபோல், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் கட்டுப்பாடற்ற அதிகாரங்களைக் கட்டுப்படுத்தி, சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுவதற்கு வழிவகுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க 17ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவந்த பெருமை எமது கட்சியின் தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீமையே சாரும்.
இவ்வாறு 13, 15, 17 போன்ற ஒற்றைப்படை எண்களைக் கொண்ட திருத்தங்கள் அனைத்தும் நாட்டுக்கு நன்மையளித்த முற்போக்கான திருத்தங்களாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
