இலங்கை பாதாள உலகக் குழுவை கண்டுபிடித்த இரண்டு அதிகாரிகளை பாராட்டிய ஜனாதிபதி
இந்தோனேசியாவில் இலங்கை பாதாள உலகக் குழுவை கண்டுபிடிப்பதில் முக்கிய பங்கு வகித்ததற்காக மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள உதவி பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த ஜயசுந்தர ஆகியோரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்றையதினம்(3) பாராட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களில் ஜகார்த்தாவில் மறைந்திருந்த கெஹல்பத்தர பத்மே எனப்படும் மண்தினு பத்மசிறி, கமாண்டோ சலிந்த மற்றும் குடு நிலந்த ஆகியோர் அடங்குவர்.
பாராட்டிய ஜனாதிபதி
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் தொடங்கப்பட்ட ஒரு ரகசிய பணியைத் தொடர்ந்து இந்த கைதுகள் இடம்பெற்றன.
இந்தோனேசிய பொலிஸுடனும் ஒருங்கிணைந்து பணியாற்றிய இரண்டு இலங்கை அதிகாரிகளும் சவாலான சூழ்நிலைகளில் பல நாட்கள் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டனர். பெரும்பாலும் குறைந்தபட்ச உணவை மட்டுமே சாப்பிட்டு, பொது இடங்களில் தூங்கினர்.
சந்தேக நபர்கள் தங்கள் பாதுகாப்பான இடத்தை விட்டு வெளியேற கடைசி நிமிட முயற்சியை மேற்கொண்ட போதிலும், அவர்கள் இறுதியில் பிடிக்கப்பட்டு இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அதிகாரிகளின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி பாராட்டியதுடன் இந்த பணியை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான இலங்கையின் போராட்டத்தில் ஒரு முக்கிய வெற்றியாகவும் விவரித்துள்ளார்.




