‘‘ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரையில் ஏமாற்றமே தவிர எவ்வித மாற்றமுமில்லை’’
ஜனாதிபதியின் விளக்கவுரை எவ்வாறு அமையும் எனப்பல எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியிலிருந்தது. ஆனால் ஜனாதிபதியின் உள்ளத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.அவரது உள்ளம் ஓரினம் சார்பாகவே இருக்கின்றது.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கொள்கை விளக்கவுரையினை ஜனாதிபதி 18/01/
2022 அன்று நிகழ்த்தினார். இக்கால சூழ்நிலையில் அவரது உரை எவ்வாறு அமையும்
எனப்பல எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியிலிருந்தது.
குறிப்பாகத் தமிழர்கள் மத்தியில் இனப்பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியின் மனதில் மாற்றம் ஏற்பட்டிருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் பேச்சுக்கு அழைப்பார் என்றெல்லாம் ஊடகங்கள் ஊகங்களைப் பிரசுரித்தன. ஆனால் ஜனாதிபதியின் உள்ளத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
அவரது உள்ளம் ஓரினம் சார்பாகவே இருக்கின்றது என்பது அவரது பேச்சில் வெளியாகியது. சிங்கள பௌத்தர்களின் தலைவர் என்ற சிந்தனைத் தளத்திலிருந்து அவர் மாறமாட்டார். தான் பல்லின மக்களின் தலைவர் என்பதை அவர் புரிய மாட்டார் என்பது புலனாகியது. விடுதலைப் புலிகளின் தலைவர் குறிப்பிட்ட கருத்தொன்று நிரூபணமாகியது.
அதாவது சிங்களத் தலைவர்கள் தமிழர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வார்கள் அதனைத் தீர்ப்பார்கள் என்று தமிழர்கள் நினைப்பது முட்டாள்தனமான சிந்தனையாகவே இருக்கும் என்று எதிர்வு கூறியிருந்தார்.
அந்த வரலாற்றுப் பட்டறிவினை ஜனாதிபதி மீண்டும் ஒரு தடவை மெய்ப்பித்திருந்தார். 74 ஆவது சுதந்திர தினத்தை நோக்கிச் சிங்களத் தலைவர்கள் நகர்ந்தாலும் இனப்பிரச்சினை விடயத்தில் அக்கறையற்றவர்களாகவே இருக்கின்றார்கள் என்பது புலனாகிறது.
மேலும் உள்நாட்டுப் பொறிமுறையால் இனப்பிரச்சினையைத் தீர்க்கும் ஆளுமை,சக்தி இலங்கைத் தலைவர்களிடம் இல்லை என்பதை உணர முடிகிறது.
இந்த நிலையில் தமிழ்த் தலைவர்கள் உறுதியான முடிவுக்கு வர வேண்டும். எமது பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரே வழிமுறை சர்வதேச அணுகுமுறைதான் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்ப தமது அணுகு முறைகளை வேகமாகவும், விவேகமாகவும் நகர்த்த வேண்டும். ஜனாதிபதி அழைப்பார்,பேசுவார், தீர்ப்பார் என்றெல்லாம் நினைப்பது ஏமாற்று வேலையாகவே அமையும்.
எனவே உள்நாட்டில் பிரச்சினையைத் தீர்ப்பதற்குச் சிங்கள ஆட்சியாளர்களால் முடியாது என்பது மட்டும் தெளிவான உண்மையாகும். அப்படி இந்த சிங்களத் தலைமைகள் அழைத்தாலும் தமிழ் மக்களை மட்டுமல்ல சர்வதேசத்தையும் ஏமாற்றும் செயலாகவே அமையும். தமிழர்களின் பிரச்சினை என்பது அபிவிருத்தி மாத்திரம்தான்.
அதனைத் தீர்த்து விட்டால் தமிழர்கள் சரணாகதியாகி விடுவார்கள் என்று ஜனாதிபதியும், அவரது அரசாங்கத்தினரும் நினைக்கிறார்கள். இப்படியான கருத்தினை முன்பொரு தடவை முக்கியமான அமைச்சர் ஒருவர் அப்போது எதிர்க்கட்சியிலுள்ள போது உரையாடும் வேளையில் என்னிடம் கூறியிருந்தார்.
அதற்குச் சாதகமாக அதாவது ஜனாதிபதியின் உரைக்குச் சாதகமாக பிழைப்புவாத உழைப்புவாத அரசியல்வாதிகள் சிலர் அடிப்படைவாதிகளோடு இணைந்து மல்லியை மலையாகக் காண்பிப்பது போன்று பிரசாரம் செய்கிறார்கள். இதற்கு உதாரணமாகக் கொள்கை விளக்கவுரைக்குச் சாதகமாகத் துதிபாடுகிறார்கள்.
பாவம் அவர்களது பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மக்களைப் பகடைக்காய்களாக உருட்டி விளையாடுகிறார்கள். அமைச்சர் டக்ளசின் கருத்துப்படி சாதகமானதைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார். அடிப்படைவாதிகள் தரமறுக்கின்ற உரிமைகளைச் சாத்தியமற்றவை என்று கருதி விட்டுவிட வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாகும்.
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற இவரது கருத்தினை பேரினவாதிகள் ஏற்கமாட்டார்கள் என்பதால் சாத்தியமற்றது என்று வீசி விட்டார் இவர். இப்படியாகப் பேரின அடிப்படை வாதிகளோடு ஒட்டி உறவாடி அவர்களை தமது அமைச்சர் பதவித் தேவைக்காக நியாயப்படுத்துவது மக்களை மறந்த சுயலாப நிலைப்பாடாகும்.
இதனை மக்கள் புரிய வேண்டும். வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சிகள் தமது நிலைப்பாட்டைத் தற்காலிகமாகவேனும் மாற்றித் தன்னோடு ஒத்துழைக்குமாறு ஜனாதிபதி கேட்டிருக்கின்றார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை பொதுவானது என்றார்.
அப்படியென்றால் இனப்பிரச்சினைத் தீர்வு விடயம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதி விடயம், காணி அபகரிப்பு விடயம், வடக்கு கிழக்கில் திட்டமிட்ட பேரின வாதக்குடியேற்றம், அரசியல் கைதிகள் விடயம், அரசுக்கு எதிரான ஜனநாயக செயற்பாடுகள், மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் இவற்றையெல்லாம் கைவிட்டு தமிழ்த் தேசியக் கட்சிகள் கைகட்டி வாய் பொத்தி நிற்கவேண்டும் என்று ஜனாதிபதி எதிர்பார்க்கின்றாரா? என்பதுதான் சொரணையுள்ள தமிழர்களின் கேள்வியாகும்.
கற்றுக்குட்டிகள், கட்டுப்பட்ட பொம்மையர்கள் வெறும் பதவிகளுக்காக உழைப்புக்காக கை கட்டி வாய் பொத்தி நின்று துதி பாடலாம். ஆனால்,உண்மையான தமிழ்ப் பிரதிநிதிகள் இவற்றைச் செய்ய முடியாது.
ஒட்சிசன் இன்றியும் வாழ்வார்கள் பதவியில்லாமல் வாழ்வார்கள் என்கின்றவர்களுக்கு ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை தித்திக்கலாம்.
ஆனால் தமிழர்களுக்கு ஏமாற்றத்தைத்தவிர எம்மாற்றத்தினையும் இந்தக் கொள்கை விளக்கவுரை அளிக்கவில்லை.இதனைத்தான் உப்புச்சப்பற்ற உதவாத குப்பை உரையென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் ஐயா குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி நாட்டை முழுமையாகக் கடன் பொறிக்குள் சிக்க வைத்து நாட்டின் சொத்துக்களையும், இறைமையையும் இழந்தாலும் தமிழர்களின் உரிமையைத்தானாக வழங்க மாட்டார் என்பது மட்டும் உண்மையாகும்.
எனவே ஜனாதிபதியின் அழைப்பைத் தமிழத் தலைவர்கள் எதிர்பார்க்காமல் சர்வதேச அணுகுமுறைகளைக் கையாள்வதொன்றே சரியான நிலைப்பாடாகும்.
இந்நிலையில் தமிழ்க் கட்சிகள் தமக்குள் காணப்படும் தன்முனைப்புச் சிந்தைகளைத் தள்ளி வைத்துவிட்டு தமிழ் மக்களுக்காக ஒற்றுமையாகி உழைக்க வேண்டும் என்பதே தமிழர்களின் ஏகோபித்த விருப்பமாகும்.
எவரும் தன்முனைப்பான முரண்பாடான கருத்துக்களைக் கொட்டி தமிழர் ஐக்கியத்தினைச் சிதைக்காமல் இருக்க வேண்டியது அவசியமாகும். அண்ணன் எப்போது சாவார் திண்ணை எப்போது காலியாகும் என்ற சுயநல அரசியலையும் தமிழ்த் தலைவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
சிங்கள பௌத்த சிந்தனைத் தளத்தால் உருவாக்கப்பட்ட இராணுவ மயப்பட்ட சிந்தனையில் ஊறியுள்ள பிடிவாதப்போக்குடைய நாட்டின் தலைவரிடம் இருந்து தமிழர்கள் எதனையும் எதிர்பார்க்க முடியாது என்பதே உண்மையாகும்.
விவசாயிகளின் சாதாரண உரப்பிரச்சினையையே விளங்கிக் கொள்ள முடியாத தலைவர்கள் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். அப்படி எதிர்பார்த்தால் அது தமிழர்களின் தவறாகவே இருக்க முடியும்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. ஸ்ரீநேசன்

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
