ஆசிரியர்களின் பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசாங்கம்! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் எங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு வேடிக்கையானதாக இருக்கின்றது என அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் கணேசன் அனிரன் தெரிவித்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த ஐந்து வருடங்களாக பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைக்கப்பட்டு ஆசிரியர்களாகக் கடமைபுரியும் பட்டதாரிகளுக்கு இதற்கு முன்பிருந்த அரசாங்களும் அநீதியை ஏற்படுத்தி இருந்தன.
போராட்டங்கள்
ஆனாலும் அவை ஒரு சில தீர்வுகளைத் தருவதற்கு முயற்சிகள் எடுத்திருந்தன. ஆனால் தற்போதைய அரசாங்க காலத்தில் நாங்கள் பாரிய அநீதிகளுக்கு உள்வாங்கப்பட்டிருக்கின்றோம்.
நாங்கள் பல போராட்டங்கள், பல கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தோம். ஆனால் இதுவரைக்கும் இந்த அரசாங்கம் எமது விடயத்தில் தீர்வை எட்டும் என்ற நம்பிக்கையும் எமக்கு இல்லை. எமக்கு தீர்வை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாடும் இந்த அரசாங்கத்திடம் இல்லை.
எமது ஐந்து வருட சேவையினைக் கருத்திற்கொண்டு வயதெல்லையினை மாற்றிக் கொடுத்திருக்கின்றோம் என்று அரசாங்கம் கூறுகின்றது.
தீர்வு
இந்த விடயம் 10 நாட்கள் பட்டினி இருந்தவனுக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு பசியைத் தீர்த்துவிட்டோம் என்று கூறுவது போன்றதான ஒரு செயலாகும்.
நாங்கள் நாடாளாவிய ரீதியில் ஒன்றிணைந்த பட்டதாரிகள், பட்டதாரிகள் ஒன்றிணைந்தால் நாட்டில் என்னவாகும் என்பது கடந்த அரசாங்கங்களுக்கு நடந்த நிகழ்வுகள் ஒரு தக்க சான்று.
அதே போன்றுதான் எங்களுடைய பிரச்சினைக்குச் சரியான ஒரு தீர்வு கிடைக்கப்படாவிடின் எந்தவொரு இடத்திற்கும், எந்தவொரு வழிமுறைக்கும் இறங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



