மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணிலுக்கு வாய்ப்பு: நாமல் ராஜபக்ச
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது மொட்டுக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கும் இருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று(17.01.2024) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
"தற்பொழுது மொட்டுக் கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்குவதற்கான நான்கு வேட்பாளர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. குறித்த நான்கு பெயர்களில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெயரும் உள்ளது. கடைசிநேரத்தில் இந்தப் பட்டியலில் பெயர் இல்லாத புதிய நபர் ஒருவர் கூட களமிறக்கப்படலாம்.
எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய ஒருவரே வேட்பாளராக நியமிக்கப்படுவார். அதன் காரணமாக வேட்பாளர் குறித்து கவலைப்படத் தேவையில்லை. வேட்பாளர் யார் என்பது முக்கியமல்ல, வெற்றி பெற முடியுமா என்பதுதான் முக்கியம். ஏனெனில் எமது பிரதிநிதித்துவ முகாமை வெற்றிபெறச் செய்ய வேண்டியது அவசியமாகும்.
அத்துடன், எங்களது அரசியல் முகாமுக்கு வெற்றியைத் தரக்கூடிய பலம் கொண்டுள்ள எந்தக் கட்சி அல்லது சக்தியுடன் வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
மேலும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை மறுசீரமைப்பதற்காக கிராமிய மக்களைக் தெளிவூட்டும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |