ஜனாதிபதி தேர்தல் இல்லையென்றால் நாடு இருள் மயமாகும் : ரிஷாட் பதியுதீன் கருத்து
"ஜனாதிபதி தேர்தலில் எந்த மாற்றங்களையும் செய்கின்ற அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.
மன்னார் - முசலி (Mannar - Musali) பகுதியில் நேற்று (01.04.2024) மாலை விவசாயிகளுக்கு இலவச விதைகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
"ஜனாதிபதி தேர்தல் வந்தே தீரும். அதற்கு முன்னர் ஜனாதிபதி விரும்பினால் நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை வைக்கலாம் அவ்வாறு இல்லை என்றால் ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபரில் நடந்தே தீரும்.
ஜனாதிபதி தேர்தல்
இல்லை என்றால் எதிர் காலத்திலே இந்த நாடு இருள் மயமாகிவிடும். அதுமட்டுமல்லாமல் உலக நாடுகள் அனைத்தும் எமது நாட்டை உற்று நோக்கி பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
பொருளாதாரத்தில் வீழ்ந்து உலகத்திற்கு 50 பில்லியன் அளவில் கடன் செலுத்த வேண்டிய நாடாக இருக்கின்ற எமது நாட்டில் ஜனநாயக ரீதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுகின்ற விடயம் தொடர்பில் எந்த ஒரு கேள்வி எழுப்புதலோ அல்லது வேறு சாட்டுக்களை சொல்வதோ முடியாத விடயமாக இருக்கும்.
தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்தே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டோம். அதனை தொடர்ந்து தற்போது வரை அதே கூட்டணியுடன் பயணித்து வருகிறோம்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுகின்ற போது எமது கட்சியின் உயர்பீடம் தேர்தலில் எந்த வேட்பாளரை தெரிவு செய்வது என்பது தொடர்பில் இறுதி முடிவெடுக்கும்.” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |