ஜனாதிபதியால் தனித்து அரசியல் முடிவுகளை எடுக்க முடியவில்லை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ராஜபக்ச குடும்பத்தை விடுத்து, தனியான அரசியல் முடிவுகளை எடுக்கும் இயலுமை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் (Athuraliye Rathana Thero) தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
தனது சகோதரரான பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பலத்தில் ஜனாதிபதி அரசியல் செய்து வருகிறார். இதனால், அரசியல்வாதிகளை முகாமைத்துவம் செய்யும் இயலுமை ஜனாதிபதிக்கு இல்லை.
தனது குடும்பத்தில் இருந்து விடுப்படும் அளவுக்கான தைரியமும் கோட்டாபய ராஜபக்சவுக்கு இல்லை.
அத்துடன் கோட்டாபய ராஜபக்ச முப்பது ஆண்டுகள் இலங்கையில் வசிக்கவில்லை என்பதால், இலங்கை மண்ணுடன் இருக்கும் பிணைப்பு சற்று குறைவாக இருக்கின்றது எனவும் அத்துரலியே ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.