எல் - நினோ லா - நினா காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ள ஜனாதிபதி செயலணியை நிறுவுங்கள்
உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் எல்-நினோ மற்றும் லா-நினா காலநிலை மாற்ற விளைவுகளை எதிர்கொள்வதற்கு, அனைத்து அரச நிறுவனங்களையும் ஒருங்கிணைத்த விசேட ஜனாதிபதி செயலணியொன்றை உடனடியாக ஸ்தாபிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ யோசனை முன்வைத்துள்ளார்.
இலங்கைக் காலநிலை மாற்றம் பற்றிய நாடாளுமன்ற ஒன்றியத்தின் விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில், "பல்வேறு ஊடக அலைவரிசைகளில் தற்சமயம் எல்-நினோ மற்றும் லா-நினா காலநிலை மாற்றங்கள் தொடர்பில் பேசப்பட்டு வருகின்றன.
ஆனால், நாம் கடந்த ஏப்ரல் 7ஆம் திகதியே இது குறித்து காலநிலை மாற்றம் பற்றிய நாடாளுமன்ற ஒன்றியத்தில் பல்வேறு அரச நிறுவனங்களைச் சேர்ந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களை அழைத்து முதன்முதலாக விவாதித்திருந்தோம்.
வழக்கமான காலகட்டம்
அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் போன்ற சர்வதேச முன்னணி அமைப்புகள், கிழக்கு திசையில் விலகும் வெப்ப நீர் ஓட்டம் காரணமாகக் கடல் நீரின் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட மிக அதிகமாக உயரும் என்ற ஆபத்தான கணிப்புகளை வெளியிட்டுள்ளன.

அதற்கமைய, மிகக் கொடூரமான 'சூப்பர் எல்-நினோ' நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் 63 சதவீதமாகக் காணப்படுவதாகக் கணிப்புகள் வெளிவருகின்றன. இதன் காரணமாகக் கடுமையான வறட்சி அல்லது எதிர்பாராத கூடிய மழைப்பொழிவு போன்ற தீவிரமான காலநிலைச் சூழ்நிலைகளை நாடு எதிர்கொள்ள நேரிடும்.
இது நாட்டின் விவசாயம், குடிதண்ணீர் விநியோகம், வனவிலங்கு-மனித மோதல்கள் அதிகரிப்பு உள்ளிட்ட பல கடுமையான பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.
அதேபோன்று, எல்-நினோவைத் தொடர்ந்து உருவாகும் லா-நினா நிலைமையால் வழக்கமான காலகட்டத்துக்கு அப்பால் மிகக் கடுமையான கனமழை பெய்யக்கூடும்.
இது மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைவதுடன், நீர் மின் உற்பத்தியையும் கடுமையாகப் பாதிக்கச் செய்யும். இத்தகைய கலக்கமான இடைநிலைச் சூழ்நிலையை ஒரு நாடாக நாம் மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும்.
ஆகவே, இந்தச் சவால்களை எதிர்கொள்வதற்குப் பிரத்தியேகமான ஜனாதிபதி செயலணியொன்று உடனடியாக அமைக்கப்பட வேண்டும். அரச கொள்கைகளுடன் இணைந்து, முன்கூட்டியே சவால்களை எதிர்நோக்கித் தீர்வுகளைத் தேடும் பணிகள் இதன் ஊடாகத் திட்டமிடப்பட வேண்டும்.
அத்துடன், வரவிருக்கும் இந்தத் தீவிரக் காலநிலை மாற்றங்கள் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்துப் பொதுமக்களுக்கு முன்கூட்டியே விழிப்புணர்வூட்டும் முறையான வேலைத்திட்டங்கள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும்." என்றார்.