பாலர்பாடசாலை ஆசிரியர்களின் தீர்க்கப்பட வேண்டிய கோரிக்கைகள்
முன்பள்ளி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தயங்கும் பட்சத்தில் எமது குழந்தைகளுக்காக வாழ்நாளை அர்பணித்த பாலர்பாடசாலை ஆசிரியர்களுக்காக எமது சமூகம் குரல் கொடுக்க முன்வர வேண்டுமென முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பத்மநாபா மன்றம் ஈ.பி.ஆர்.எல்.எப், இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கிழக்கு மாகாணசபையின் கல்வி அமைச்சின் கீழ் செயற்படுகின்ற பாலர்பாடசாலை கல்விப் பணியகமானது அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய 17கல்வி வலயங்களைக் கொண்டு 1681 பாலர் பாடசாலையின் கீழ் 3780 ஆசிரியர்களையும், 46240 மாணவர்களையும், உள்ளடக்கி மிகவும் சிறப்பான முறையில் செயற்பட்டு வருகின்றன.
இப் பணியகத்தின் கீழ் செயற்படுகின்ற ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் பல ஆண்டுகாலமாக தொண்டர்களாக சேவையாற்றி ஒரு சில ஆசிரியர்களைத் தவிர ஏனைய ஆசிரியர்கள் அனைவருக்கும் பாலர்பாடசாலை கல்விப் பணியகத்தினால் வழங்கப்படும் மாதாந்தக் கொடுப்பனவுகளை நம்பி காலை 7.30மணி தொடக்கம் மதியம் 12மணிவரையும் சேவை மனப்பாங்குடன் வறுமையின் உச்சத்தில் நின்று பாலகர்களுக்கு வழிகாட்டியாக சேவையாற்றி வருகின்றனர்.
முன்பள்ளி ஆசிரியர்களின் சேவையை எந்த கல்விச் சமூகமும் பாராட்டாமல் இருந்து விட முடியாது. இப் பாலகர்களுக்கு ஆர்வத்தை தூண்டக் கூடிய அடித்தளத்தை ஏற்படுத்துவது இவ் முன்பள்ளி ஆசிரியர்களே.
இப்படிப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களின் கீழ் குறிப்பிடப்படும் விடயங்களை தீர்க்கும் பட்சத்தில் ஓரளவிற்கு இவ் முன்பள்ளி ஆசிரியர்களின் குறைகளை தீர்க்க முடியும்.
தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள்
1.முன்பள்ளி ஆசிரியர்களின் மாதாமாதம் வழங்கப்படுகின்ற கொடுப்பனவை அதிகரித்து உரிய நேரத்திற்கு வழங்குதல்
2. முன்பள்ளி ஆசிரியர்களும், பாலகர்களும் அணிந்து செல்கின்ற சீருடைகளை ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை சீருடைகள் அல்லது கொடுப்பனவுகளை அரசால் வழங்க நடவடிக்கை எடுத்தல்
3. முன்பள்ளி ஆசிரியர்கள் பல வருடங்களுக்கு மேலாக சேவையாற்றி ஓய்வுக்குச் செல்லும் காலகட்டங்களில் ஒரு விசேட கொடுப்பனவுகளை அவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்
4. இவ் ஆசிரியர்களுக்கு கடமை நேரங்களில் உயிராபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் இவர்களுக்கான நஸ்டஈடு கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுத்தல்
5. முன்பள்ளி ஆசிரியர்களுக்கு போக்குவரத்திற்கான கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுத்தல்.
6. முன்பள்ளி ஆசிரியர்கள் கடமை நேரங்களில் ஈடுபடும் நேரங்களில் நோய்வாய்பட்டு அல்லது இறந்து போனால் அவர்களை அடையாளம் கண்டு நஸ்ரஈடு வழங்க நடவடிக்கை எடுத்தல்
7.இவ் ஆசிரியர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்க நடவடிக்கை எடுத்து இது போன்ற
இன்னும் பல தேவைகளை நிறைவேற்ற ஜனாதிபதி கோட்டப்பாய ராஜபக்ச
தலைமையிலான அரசு நடவடிக்கை எடுப்பதற்கு கிழக்கு மாகாணசபையின் கல்விப் பணியகம்
முன்வர வேண்டும் எனவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



