சுயலாப அரசியலுக்காக பிரஜா சக்தி திட்டம்.. அநுர அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் சுயலாப அரசியலுக்காக தான் பிரஜா சக்தி கொண்டு வரப்படுவதாக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஷ் தெரிவித்துள்ளார்.
இன்று (31) இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், சுதந்திரமாக இயங்கக்கூடிய சபையின் விடயத்தில் சுயலாப கட்சி அரசியல் செய்யும் நோக்கோடு கிராமம் தோறும் பிரஜா சக்தி அமைப்பு உருவாக்கப்பட்டு வருவதை இச்சபை வன்மையாக கண்டிக்கின்றது.
பருத்தித்துறை பிரதேச சபையின் நிதி மற்றும் நிர்வாக கட்டமைப்பு விடயங்களில் தலையீடு செய்யும் விதமாக பிரஜா சத்தி அமைப்பின் மூலம் செய்யப்படும் எந்த விதமான சிபாரிசுகளையும் முன்மொழிவுகளையும் நிராகரிப்பது என்று பிரதேச சபை முடிவெடுத்துள்ளது.
கடும் எதிர்ப்பு
அதன் அடிப்படையில் அண்மையில் இடம்பெற்ற பிரதேச சபை அமர்வில் பிரஜா சக்திக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் பத்து வாக்குகளால் வெற்றிகரமாக சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு தேசிய மக்கள் சக்தியுடன் சேர்ந்து சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். இந்த பிரஜா சக்தி திட்டம் எங்களுடைய உள்ளூராட்சி சபைகளை கேள்விக்கு உட்படுத்துகின்ற ஒரு விடயமாக காணப்படுகிறது. மக்கள் ஆணை வழங்கியே இந்த சபைக்கு வந்திருக்கிறோம்.
அவற்றை கேள்விக்கு உட்படுத்துகின்ற ஒரு விடயமாக இந்த பிரஜா சக்தி காணப்படுகிறது.
அரச உத்தியோகத்தர்களின் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அவர்களின் செயற்பாடுகளை கேள்விக்குட்படுத்தும் வகையில் கொண்டு வரப்படும் இந்த பிரஜா சக்தி திட்டத்தை வன்மையாக கண்டிப்பதாக பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளர் யுகதீஸ் தெரிவித்துள்ளார்.