பிரஜா ஹரித அபிமானி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு மட்டக்களப்பில் முன்னெடுப்பு
ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான பசுமையான தேசத்தினை உருவாக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பிரஜா ஹரித அபிமானி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மரநடுகை திட்டம் இன்று மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நீர்மூலங்களை பாதுகாத்தல் மற்றும் கிராமங்களை அழுகுபடுத்தி பசுமையான இலங்கையை கட்டியெழுப்பும் வகையில் ஜனாதிபதியினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களம் ஊடாக இந்த திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு இன்று மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிச்சையடியில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் கருத்துத் தெரிவிக்கையில்,
யுத்தம் முடிந்த பின்னர் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் பல்வேறு உட்கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அவை கடந்த ஆட்சிக்காலத்தில் குழப்பியடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவற்றினை சீர்செய்ய வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.
இதன்போது பத்து இலட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன், பிரதேச மட்ட அமைப்புகளுக்கும் மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டன.
2023ஆம் ஆண்டளவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பொறியியலாளர் பூ.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் நவேஸ்வரன்,மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் சுதர்சன், நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்புச்செயலாளர் தேவராஜன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.