மோதலில் முடித்த பிரதேச சபையின் பாதீடு விவகாரம் : பொலிஸார் தீவிர விசாரணை (Video)
மன்னார் பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அமர்வின் போது ஏற்பட்ட கலவரத்தில் இரு உறுப்பினர்கள் காயமடைந்துள்ள நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான வாக்கெடுப்பு தொடர்பான கூட்டம் இன்று திங்கட்கிழமை (20) காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகியது.
இதன் போது மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எச்.எம் முஜாஹீரா? அல்லது உப தவிசாளராக இருந்த முஹமட் இஸ்ஸதீனா? என்ற பாரிய இழுபறி நிலைமை சபை உறுப்பினர்களுக்கு இடையில் காணப்பட்டது.
இதன் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம், கலவரமாக மாறிய நிலையில் பிரதேச சபையின் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் தர்க்க நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் போது மன்னார் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பெண் உறுப்பினரான ஆசிரியர் றோமன் டிப்னா , இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் பாலச்சந்திரன் கதிர் காமநாதனுடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இருவரும் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் பிரதேச சபையின் தலைவரால் சபை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச சபையின் 42ஆம் மற்றும் 43 ஆம் சபை அமர்வுகளில் சபையின் தவிசாளர் யார் என்ற சந்தேகம் எழுந்ததால் அமர்வுகளில் இருந்து எதிர் தரப்பு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிய வருகின்றது.
இச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.