இலங்கையில் நாடாளுமன்ற மற்றும் உயர்நீதிமன்ற அதிகார இழுபறி நிலை உச்சக்கட்டத்தில்
நாடாளுமன்றத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) ஆற்றிய உரையினால், உயர்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு செல்லுபடியற்றதாகாது என்று இலங்கையின் முன்னணி சட்டத்தரணிகள் குழுவான சட்டத்தரணிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் (Deshabandu Tennakoon) நியமனம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு, அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையின் செயற்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (26.07.2024) கொழும்பில் நடத்தப்பட்டது.
இதன்போது, அரசாங்கம், அண்மைக்காலமாக நீதிமன்றத்திற்கு வேண்டுமென்றே கீழ்ப்படியாத போக்கை கடைப்பிடித்து வருவதாக சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தினர்.
உயர்நீதிமன்றத்தின் அதிகாரம்
இந்த நிலைப்பாடு, நாட்டின் முன்னேற்றத்திற்கு எல்லா வகையிலும் தடையாக இருக்கும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில், தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபரின் கடமைகளையும் பொறுப்புக்களையும் தொடர முயற்சித்தால், அது நீதிமன்ற அவமதிப்பு பிரிவு விதிமுறைகளின் கீழ் நீதிமன்றத்தை அவமதித்த குற்றமாகும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம், அரசியலமைப்புச் சபையின் தீர்மானத்திற்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என சில தரப்பினர் முன்வைத்த கூற்று நிராகரிக்கப்பட்டது.
எனவே, அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகளை உயர் நீதிமன்றத்தினால் சவாலுக்கு உட்படுத்த முடியாது என பிரதமர் கூறியமை தவறானது மற்றும் சட்டத்தில் செல்லுபடியற்றது என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.
கடமைகள் மற்றும் பொறுப்புகள்
மாறாக, அரசியலமைப்புச் சபையின் விவகாரங்களில் கூட உயர்நீதிமன்றம் தனது அடிப்படை உரிமைகள் அதிகார வரம்பைப் பயன்படுத்த அதிகாரம் பெற்றுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்க ஜனாதிபதி தவறினால், அரசியலமைப்பின் ஏற்பாட்டில் பொருத்தமான ஒருவருக்கு கடமைகள் மற்றும் பொறுப்புகளை வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றமோ, ஜனாதிபதியோ, நீதிமன்றமோ அரசியலமைப்பை விட மேலானவையல்ல எனவும், அவை அனைத்தும் அதற்கு உட்பட்டவை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரத்தினம் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |