வலுசக்தி அமைச்சருக்கு வலி.மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் கடிதம்
வலி.மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் இன்றைய தினம் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகரவுக்கு கடிதம் ஒன்றினை மின்னஞ்சல் மூலமாகவும், தபால் மூலமாகவும் அனுப்பியுள்ளார்.
தற்காலத்தில் ஏற்பட்டுள்ள எரிபொருள் சிக்கல் காரணமாக கடற்றொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் படும் இன்னல்களை நீக்கும் முகமான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு கோரி இந்த கடிதத்தினை அனுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடுகளில் இன்று வரையும் மண்ணெண்ணெய் நாட்டில் இல்லை. இதனால் விவசாயிகள் மரக்கறி உற்பத்தி,சிறுதானியப்பயிர் உற்பத்தி மற்றும் இதர உற்பத்திகளை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதே போன்று கடற்றொழிலை நம்பி வாழுகின்ற மக்கள் இன்று கடற்றொழிலுக்கு செல்ல முடியாது வாழ்வாதாரத்தை நாளுக்கு நாள் மோசமான பட்டினி சாவுக்கு அத்துடன் உள்ளூராட்சி மன்றங்களினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு பயன்படுத்கப்படும் இயந்திரங்களுக்கு இழந்து தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
குடிநீர் விநியோக சேவை மண்ணெண்ணெய் அத்தியாவசியமாக உள்ளது. எனவே நாட்டினுடைய ஒவ்வொரு உற்பத்திகளிலும் எரிபொருளின் வகிபாகம் மிக அதிக ஆதிக்கம் செலுத்தி வருவதனால் இவ்வாறான அசௌகரியங்களுக்கு மக்கள் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
இந்நாட்டில் தொடர்ந்து நிலவுகின்ற சீரற்ற அரசியல் இஸ்திரத்தன்மை என்பன தொடர்ந்து தலைவிரித்து ஆடுவதனால் சரியான ஒழுங்கில் மக்களின் அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதுள்ளது.
தற்போது புதிய அமைச்சராக வந்து தாங்கள் செயல்படுவதனால் விரைவில் நாட்டில் ஏற்பட்டு வரும் உணவுப்பஞ்சத்திலிருந்து மக்களை காப்பதற்கு மண்ணெண்ணையின் அவசியத்தை தாங்கள் உணர்ந்தவராக நாட்டின் வளங்களை உறங்கு நிலைக்கு போகாமல் முன்னேற்றுவதற்கு முன்னின்று செயற்படுவீர்கள் என நம்புகின்றேன்.
தற்போது விவசாயிகளும் கடற்றொழிலாளர்களும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறான பாதிப்பு நாட்டின் பொருளாதாரத்தில் இரட்டிப்பு மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.
அத்துடன் உற்பத்தியினுடைய உருவாக்கத்தை மேம்படுத்த விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் நாட்டின் பொருளாதார சுமைகளை குறைப்பது மிகவும் அவசியமானது.
ஆகவே இதற்கான நடவடிக்கையை தாங்கள் விரைந்து எடுத்து பெட்ரோல், விநியோகத்தைப் போன்று ஒரு ஒழுங்கு முறையில் மண்ணெண்ணை விநியோகத்தையும் மேற்கொள்வதனால் மக்களுக்கு இருக்கும் அவலங்களை தீர்க்க முடியும் என எதிர்பார்க்கின்றேன்.
அத்துடன் எதிர்காலத்தில் சீரான ஒழுங்கினை மேற்கொண்டு உற்பத்தியாளர்கள் தங்கள்
வளங்களில் அதிஉச்ச பயனை அடையும் நோக்கில் புதிய தொழிநுட்பத்தை பொறிமுறையை
நாட்டில் விரைவில் பரீட்சித்து ஒரு நல்ல நடைமுறையை நாட்டில் விரைவில்
அறிமுகப்படுத்துவதோடு மாற்று வலுசக்தியினை பயன்படுத்துவதற்கு முன்னின்று
தாங்கள் செயற்பட வேண்டும் என தயவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்றுள்ளது.