குரங்கின் மீது பழி சுமத்தி மக்களை ஏமாற்ற முயலாதீர் - அரசுக்கு எதிர்க்கட்சி எச்சரிக்கை
உள்நாட்டுப் போரின்போது தமிழீழ விடுதலைப் புலிகள் 33 ஆயிரம் மெகாவோல்ட் மின் பிறப்பாக்கியைத் தீயிட்டுக் கொளுத்தியபோது கூட நாடளாவிய ரீதியில் மின்துண்டிக்கப்படவில்லை. அவ்வாறிக்கையில் குரங்கின் மீது பழி சுமத்தி குரங்கு சேட்டைகள் காண்பிக்க வேண்டாம். அளவுக்கதிகமாக மக்களை ஏமாற்றவும் முற்பட வேண்டாம் என்று அநுர அரசை எச்சரித்துள்ளது ஐக்கிய மக்கள் சக்தி.
கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.
மின் துண்டிப்பை ஏற்படுத்த முடியுமா?
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஞாயிறன்று ஏற்பட்ட மின்தடைக்கு மின்சக்தி அமைச்சர் குரங்குகள் மீது பழி சுமத்தினார். 33 ஆயிரம் மெகாவோல்ட் கொண்ட மின் பிறப்பாக்கி விடுதலைப்புலிகளால் தீ வைக்கப்பட்டபோது கூட இவ்வாறு நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை. அவ்வாறிருக்கையில் ஒரு குரங்கால் முழு நாட்டுக்கும் மின் துண்டிப்பை ஏற்படுத்த முடியுமா?
மின்சக்தி அமைச்சரால் குறிப்பிடப்பட்ட இந்தக் கருத்து பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பின்னர் கடந்த அரசின் செயற்பாடுகளே இதற்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார். கடந்த அரசுகளின் குறைகளைக் கூறியே இவர்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.
தற்போது ஆட்சியில் இருந்து கொண்டும் இதனையே கூறுகின்றனர். முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்தியதாகக் கூறியவர்களின் இயலாமை தற்போது வெளிப்பட ஆரம்பித்துள்ளது. நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திலுள்ள மின் பிறப்பாக்கிகள் செயலிழந்தமையால் இந்த நிலைமை ஏற்பட்டது எனக் கூறினர்.
கடந்த காலங்களில் நுரைச்சோலை மின் பிறப்பாக்கிகள் செயலிழந்த சந்தர்ப்பங்களில், அது தொழிற்சங்க மாபியாக்களின் செயல் என விமர்சித்தனர்.
அவ்வாறெனில் இந்த அரசுக்கும் அந்த மாபியாக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதா? சூரிய மின் உற்பத்தி களங்களால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு அதிகம் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் குறிப்பிடுகின்றது.
உண்மையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்
சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்திகள் பிரபலமாகும் பட்சத்தில் நிலக்கரி மற்றும் டீசல் மாபியாக்களுக்குப் பாதிப்பு ஏற்படும். எனவே, அந்த மாபியாக்களைப் பாதுகாப்பதற்காகவே இவ்வாறான கதைகள் கூறப்படுகின்றன.
இந்த மாபியாக்களின் தேவைக்கேற்ப செயற்படுவதற்கு அரசு இணங்கியுள்ளதா? நுரைச்சோலை மின்பிறப்பாக்கிகள் செயலிழக்கப் போவதை அறிந்தே அரசு அதற்கு இடமளித்திருக்கின்றது.
இந்த உண்மையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மேடைகளில் வீர வசனம் பேசுவதை விட, நடைமுறையில் ஆட்சி செய்வது சிக்கல் என்பதை இப்போது ஜே.பி.வி. புரிந்து கொண்டிருக்கும். ஏனைய ஆட்சிக் காலங்களில் இவ்வாறு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருப்பதாகக் குறிப்பிட்டு வீதிக்கு இறங்கியிருப்பர்.
தமது ஆட்சி என்பதால் மௌனமாக இருக்கின்றனர். அளவுக்கதிகமாக மக்களை ஏமாற்ற முற்பட வேண்டாம். மகிந்தவை ஆட்சியில் அமர்த்தி, அவரைத் துரத்துவதற்கு மைத்திரிக்கு வாக்களித்து பின்னர் கோட்டாபயவை நாட்டை விட்டு ஓடச் செய்தவர்களே உங்களையும் ஆட்சியில் அமர்த்தியிருக்கின்றனர் என்பதை மறந்து விட வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri

Super Singer: பாதியில் பாடலை நிறுத்திய சிறுமி.... அதிருப்தியில் அரங்கம்! நடுவர்களின் முடிவு என்ன? Manithan

7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri
