இந்திய அழகி உட்பட 17 பேருக்கு கோவிட் :ஒத்திவைக்கப்பட்டது உலக அழகிப் போட்டியின் இறுதிச்சுற்று
2021 ஆம் ஆண்டு உலக அழகியை தெரிவு செய்யும் இறுதிச் சுற்றை தற்காலிகமாக ஒத்திவைக்க போட்டி ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
இந்த உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துக்கொள்ளும் இந்திய அழகி மனாசா வர்ணாசி (Manasa Varanasi) உட்பட 17 பேருக்கு கோவிட் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இறுதிச் சுற்று போட்டி நேற்று ஆரம்பமாகவிருந்த நிலையிலேயே போட்டி ஏற்பாட்டாளர்கள் திடீரென அதனை தற்காலிமாக நிறுத்தியுள்ளனர்.
இம்முறை உலக அழகிப் போட்டி கரீபியன் தீவான புவர்டோ ரீகோ நகரில் ஹோசே மிகுவெல் அரங்கத்தில் நடைபெறவிருந்தது. இந்த நிலையில், இன்னும் 90 நாட்களில் போட்டியை நடத்த நடவடிக்கை எடுப்பதாக போட்டியின் ஏற்பாட்டாளர்கள் இன்ஸ்ட்ராகிரமில் கூறியுள்ளனர்.
இதனிடையே கொரோனா தொற்றுக்கு உள்ளான இந்திய அழகி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். எனினும் அவருக்கு சிறியளவில் தடிமன் மாத்திரமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனாசா வர்ணாசி 2020 இந்திய அழகியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்தே உலக அழகிப் போட்டியில் கலந்துக்கொள்கிறார்.
இந்த 4 உலக அழகிப் போட்டியில் இலங்கை சார்பில் சேட் கிறீன்வுட் (Sade GreenWood) கலந்துக்கொண்டுள்ளார். இவர் 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை அழகியாக தெரிவு செய்யப்பட்டார்.