முல்லைத்தீவிற்கான அஞ்சல் பரிவர்த்தனை வாகனம்.. சபையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை
முல்லைத்தீவிற்கு அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் விரைவாக வழங்கப்படும் என கடந்த மாதம் வெகுசன ஊடக பிரதியமைச்சரால் தம்மிடம் தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை முல்லைத்தீவிற்கு அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் வழங்கப்படவில்லை என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்று (07.05.2026) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவிடமே நாடாளுமன்ற உறுப்பினர் இதனை குறிப்பிட்டார்.
இத்தகைய சூழலில் முல்லைத்தீவிற்கான அஞ்சல் பரிவர்த்தனை வாகனத்தின் பழுதுபார்க்கும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், குறித்த அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் விரைவில் முல்லைத்தீவுக்கு அனுப்பப்படுமெனவும் வெகுசன ஊடகப் பிரதி அமைச்சர் கௌஷல்யா ஆரியரத்ன நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தெரிவித்த கருத்து
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2026.04.08 அன்று வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் முல்லைத்தீவு மற்றும் மன்னாருக்குரிய அஞ்சல் பரிவர்த்தனை வாகனங்கள் தொடர்பில் வெகுசன ஊடகப் பிரதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் மிகவும் விரைவாக மேற்படி வாகனங்கள் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு வழங்கப்படுமென வெகுசன ஊடகப் பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்னவால், 08.04.2026 அன்றைய நாள் மாலையில் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய மன்னாருக்கு உடனடியாக குறித்த அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் வழங்கப்பட்டபோதும் முல்லைத்தீவிற்கு வாகனம் வழங்கப்படுவதில் ஒரு மாத காலமாக தொடர்ந்தும் இன்றுவரை இழுபறிநிலை நீடித்துவருகின்றது.

இந்நிலையில் முல்லைத்தீவிற்கு அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் வழங்கப்படுவதிலுள்ள இழுபறிநிலை தொடர்பாக 07.05.2026இன்று நாடாளுமன்றில் வாய்மூல விடைக்கான வினாநேரத்தில் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேள்வி எழுப்பினார்.
அந்தவகையில் மாகாண அளவிலான அஞ்சல் சேவை வழங்கலில் முல்லைத்தீவு சமத்துவ நிலையில் இன்று வரை அணுகப்படவில்லை. அதற்கு முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இதுவரை அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் வழங்கப்படாமை ஒரு சான்று என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது வெகுசன ஊடக அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு முல்லைத்தீவிற்கு அஞ்சல் பரிவர்த்தனைக்காக வழங்கப்பட்ட வாகனம் திருத்த வேலைகள் நிறைவுசெய்யப்பட்டபோதும் யாழ்ப்பாணத்தில் இருப்பதாக அறியமுடிவதாகவும் தெரிவித்தார்.
எனவே காலதாமதமின்றி, வவுனியாவில் இருந்து முல்லைத்தீவிற்கான அஞ்சல் பரிவர்த்தனையை மேற்கொள்வதற்குரிய அந்த வாகனத்தை வழங்குவதற்கு வெகுசன ஊடக அமைச்சரின் விசேட தலையீட்டை இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கோரினார்.
ரவிகரன் வலியுறுத்து
இந்நிலையில் அஞ்சல் பரிவர்த்தனைக்கான வாகனங்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் அஞ்சல் பரிவர்த்தனை வாகனங்களை புதிதாக கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும், அதற்கென வரவுசெலவுத்திட்டங்களல் நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவிற்கான அஞ்சல் பரிவர்த்தனை வாகனத்தின் பழுதுபார்க்கும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், குறித்த அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் விரைவில் முல்லைத்தீவுக்கு அனுப்பப்படுமெனவும் வெகுசன ஊடகப் பிரதி அமைச்சர் கௌஷல்யா ஆரியரத்ன நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மேற்படி விடயத்தில் வெகுசன ஊடக பிரதி அமைச்சரின் விசேட தலையீட்டுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நன்றியைத் தெரிவித்ததுடன், கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவுக்கு வரும் வகையில் அல்லது வவுனியாவில் இருந்து முல்லைத்தீவுக்கு வரும் வகையில் அஞ்சல் பரிவர்த்தனையில் இன்னும் இழுபறி நிலை இருப்பதாக பிரதி அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.
எனவே முன்னரே திட்டமிட்டதற்கு அமைவாக வவுனியாவில் இருந்து முல்லைத்தீவுக்கு மேற்படி பரிவர்த்தனை வாகனம் வரும் வகையில் பிரதி அமைச்சர் விசேட தலையீட்டோடு விரைவாக அதனை உறுதிப்படுத்தித் தருமாறு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் வழங்குதல் மற்றும் பதிவுசெய்யப்பட்ட அஞ்சல் அலுவலகப் பதிலாளிகளின் நியமனந் தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வெகுசன ஊடக பிரதி அமைச்சருக்கு 07.05.2026இன்று கோரிக்கைக் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
