கொழும்பு துறைமுக பகுதியில் துப்பாக்கிச்சூடு! 8 பேர் வைத்தியசாலையில்
கொழும்பு துறைமுகம் ஊடாக செல்லும் அதிவேக நெடுஞ்சாலையில் பெறுமதியான பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள பகுதியில் அத்துமீறி நுழைந்த 08 பேர் மீது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இன்று (01.05.2023) துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
கொழும்பு துறைமுகத்தின் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 04 பெண்கள் உட்பட 08 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கரையோரப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் புளூமெண்டல் பகுதியை சேர்ந்த ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம்
கொழும்பு துறைமுகத்தின் 06வது வாயிலுக்கு அருகில் உள்ள துறைமுகத்தில் இரும்பு திருட வந்த இருவரிடம் விசாரணை நடத்துவதற்காக குழுவொன்று சம்பவ இடத்திற்கு வந்த போது அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது பாதுகாப்பு உத்தியோகத்தரிடமிருந்து நபரொருவர் துப்பாக்கியைப் பறிக்கச்சென்ற நிலையில் மற்றுமொரு பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அத்துமீறி நுழைந்தவர்களில் சிலர் போதைக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.