ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வரும் துறைமுக நகரம்
கொழும்பு துறைமுக நகர திட்டத்தை நேரடியாக ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது உட்பட மூன்று அடிப்படை நடவடிக்கைகளுக்கான அமைச்சரவை பத்திரம் ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமைச்சரவையில் தாக்கல் செய்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த அமைச்சரவை பத்திரங்கள் தொடர்பான இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையடப்படுகிறது. கொழும்பு துறைமுக நகரின் பணிகளில் இருந்து மிக சிறப்பான மற்றும் முறையான சேவைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் திட்டத்தை ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் பின்னர், துறைமுக நகர பிரதேசத்தின் நகர அபிவிருத்தி, குப்பைகளை அப்புறப்படுத்தல், துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும் துறைமுக நகர திட்ட முகாமைத்துவப் பிரிவின் நிதி சம்பந்தமான கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் நிர்வாக பணிகள் என்பன ஜனாதிபதியை கேந்திரமாக கொண்டு முன்னெடுக்கப்படவுள்ளன.
இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தில் ஜனாதிபதி கடந்த 15 ஆம் திகதி கையெழுத்திட்டுள்ளார்.



