முதுமையடையும் வேகம் அதிகரிக்கும் நாடாக இலங்கை : உலக வங்கி எச்சரிக்கை
இலங்கை 2030ஆம் ஆண்டளவில் முதியோர் மக்கள் தொகை அதிகமுள்ள நாடாக மாறும் என உலக வங்கியின் புதிய அறிக்கை எச்சரித்துள்ளது.
‘Demographic Change in South Asia: From Tailwinds to Headwinds for Development’ ’ எனும் அறிக்கையின்படி, இலங்கையின் உழைக்கும் வயதுடைய மக்கள் தொகையின் விகிதம் ஏற்கனவே 2005ஆம் ஆண்டில் உச்சத்தை எட்டியுள்ளது.
உழைக்கும் வயதுடைய மக்கள்
தெற்காசியாவின் உழைக்கும் வயதுடைய மக்கள் தொகை வளர்ச்சி, 1960–2023 காலப்பகுதியில் ஆண்டுக்கு சராசரியாக 2.2 சதவீதமாக இருந்த நிலையில், 2024–2050 காலப்பகுதியில் 0.6 சதவீதமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மக்கள் தொகை மாற்றத்தால் கிடைத்த பங்களிப்பு 0.4 சதவீதப் புள்ளியிலிருந்து 0.1 சதவீதப் புள்ளியாகக் குறையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
அத்துடன், தெற்காசியாவின் உழைக்கும் வயதுடைய மக்களில் 60 சதவீதத்தினர் மட்டுமே தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 88 சதவீதத்தினர் முறைசாரா தொழில்களில் பணியாற்றுகின்றனர்.
முறைசாரா தொழிலாளர்கள் முறைசார்ந்த தொழிலாளர்களைவிட 45 முதல் 84 சதவீதம் வரை குறைந்த வருமானம் பெறுவதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மக்கள் தொகை முதுமையடைதல், தொழிலாளர் வெற்றிடங்கள் மற்றும் குறைந்த உற்பத்தித்திறன் ஆகியவை எதிர்காலத்தில் தெற்காசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் சவாலாக அமையும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.