தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் சிலருக்கு தமிழ்த்தேசிய அரசியல் வரலாறு தெரியாது - கோவிந்தன் கருணாகரம்
தமிழ் அரசியல் கைதிகளை அவமானப்படுத்தியவரை மட்டக்களப்புக்கு அழைத்துவந்து சந்திப்பினை மேற்கொண்டதானது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிக்கும் செயற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(Govinthan Karunakaram) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
காணாமல்போனோருக்கு மரணச்சான்றிதழ் வழங்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ள நிலையில் இராணுவத்திடம் சரணடைந்த ஈரோஸ் தலைவர் பாலகுமாரன் அவரது மகன் ஆகியோர் எங்கே எனவும் கேள்வியெழுப்பிய அவர் அவ்வாறானால் அவர்கள் கொல்லப்பட்டுள்ளார்களா எனவும், அவ்வாறு அவர்கள் கொல்லப்பட்டிருந்தால் இலங்கை அரசாங்கம் கொலைக்குற்றவாளியென்பதை ஏற்றுக்கொள்கின்றது என்பதே அதன் அர்த்தம் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இன்று உள்ள சிலருக்குத் தமிழ்த் தேசிய அரசியல் வரலாறு தெரியாது எனவும் அவர்கள் மாவை சேனாதிராஜாவிடம் கற்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு நேற்றைய நாள் ஒரு கரும்புள்ளியேற்பட்டுள்ளது. இலங்கையின் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை கடந்த சில நாட்களாகத் தமிழ் மக்கள் மத்தியில் பேசப்பட்டவர். அவர் நேற்றையதினம் மட்டக்களப்புக்கு வந்து கட்சி அரசியலில் ஈடுபட்டிருக்கின்றார்.
பொதுஜன பெரமுன மட்டக்களப்பு அலுவலகத்தில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் ஆகியோருடன் சந்திப்பினை நடாத்திவிட்டுச் சென்றுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை அனுராதபுர சிறைச்சாலையில் மது போதையில் சென்று தமிழ் அரசியல் கைதிகளை தனக்கு முன்பாக முழந்தாழிட வைத்து துப்பாக்கியைத் தலையில் வைத்து அச்சுறுத்தியுள்ளார்.
அதற்கும் மேலாகத் தமிழ் அரசியல் கைதிகளை தனது சப்பாத்தினை நக்குமாறு கோரி அவமானப்படுத்தியவரை மட்டக்களப்புக்கு அழைத்துவந்து சந்திப்பினை மேற்கொண்டதானது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிக்கும் செயற்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.