எந்தவொரு சுற்று நிருபத்தினாலும் மக்களின் குரலை நசுக்க முடியாது – சஜித்
எந்தவொரு சுற்று நிருபமோ, அறிவித்தலோ அல்லது உத்தரவோ மக்களின் குரலை நசுக்கிவிட முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகாமையில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களைச் சுகாதார சேவைப் பணிப்பாளர் தடை செய்தமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரசாங்கம் ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சிவில் உரிமைகளைப் புறந்தள்ளி அடக்குமுறைகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருளை விலையைக் குறைக்குமாறு மக்கள் கோருகின்றனர், உரத்தை வழங்குமாறு விவசாயிகள் கோருகின்றனர், நிவாரணங்களை வழங்குமாறு மீனவர்கள் கோருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் நியாயமான கோரிக்கைகளை முன் வைத்து மேற்கொள்ளும் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.