தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை:தொழிலாளர் செங்கொடி சங்கத்திற்கு நன்றி தெரிவிப்பு
மலையகத்தில் தொழிற்சங்க பலம் வைத்துள்ள தொழிற்சங்கங்கள் செய்ய முடியாத வேலையினை இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கம் நீதிமன்றத்தின் ஊடாக தீர்வு பெற்றுக்கொடுத்துள்ளதாக மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் தெரிவித்தார்.
கொட்டகலை கொமர்சல் பகுதியில் கடந்த 21 ஆம் திகதி மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மிக நீண்டகால இழுபறி நிலையில் காணப்பட்ட தோட்டத்தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு உயர் நீதிமன்றம் தொழில் அமைச்சு ஊடாக கம்பனிகளுடன் பேசி நியாயமான சம்பளத்தினை எதிர்வரும் நவம்பர் 30 திகதிக்கு முன்பாக பெற்றுத்தர வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.
சம்பள பிரச்சினை
இது உண்மையிலேயே தொழிலாளர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். இவ்வாறான வழக்கினை தொடுத்து தோட்டத்தொழிலாளர்களுக்கு நியாயத்தினை பெற்றுக்கொடுத்தற்காக மலையக மக்கள் சகதி என்ற ரீதியில் இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கத்திற்கு பாராட்டுக்களையும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மலையகத்தில் தோட்டத்தொழிலாளர்களை அடிப்படையாக கொண்டு பல தொழிற்சங்கங்கள் இருக்கின்றன குறிப்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி ஆளுமையுள்ள பலமிக்க தொழிற்சங்கங்களாக காணப்படுகின்றன.
தொழிற்சங்கத்தினை வைத்து அரசியல் செய்வதனால் மாறி மாறி இவர்கள் வரும் போதெல்லாம் தொழிலாளர்களுக்கு ஏதாவது ஒன்றை சொல்லிவிட்டு தொழிலாளர்களின் உண்மையான பிரச்சினையான சம்பள பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லை.
இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கத்திற்கு எவ்வத அரசியல் நோக்கமும் இல்லாததனால் இன்று அவர்கள் நீதி மன்றம் சென்றாவது தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று செயப்பட்டு அதில் வெற்றி கண்டுள்ளார்கள்.
இதனை இன்று மலையகத்தில் இருக்கின்ற பெரும் தொழிற்சங்கங்கள் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை.மாறாக இவர்கள் ஊடகத்திலும் அமைச்சு மட்டத்திலும் பேசினார்களே தவிர வேறொன்றும் செய்ய வில்லை.
காணியுரிமை
அதற்கு பிரதான காரணம் இவர்களுக்கு அரசியல் ரீதியாக கிடைக்கின்ற வரப்பிரசாதங்கள் கிடைகாது போய்விடும் என்ற காரணங்களுக்காகவே இவர்கள் நீதிமன்றம் செல்லவில்லை.
இன்று பெருந்தோட்டங்களில் சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரத்திற்கு உட்பட்ட தொழிலாளர்களே நிரந்தர தொழிலாளர்களாக தொழில் புரிகின்றனர்.ஆனால் ஒரு லட்சத்திற்கு அதிகமான தொழிலாளர்கள் சிறு தோட்ட உரிமையாளர்களிடம் சென்று இன்று வருமானம் போதாமையின் காரணமாக தொழில் புரிகின்றனர்.
இதனால் அவர்கள் பெரும் அடிமை தொழிலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றே கூற வேண்டும். கம்பனியின் கீழ் தொழில் புரியும் போது சம்பளத்திற்கு மேலதிகமாக தொழிலாளர்களுக்கு பல சலுகைகள் கிடைக்கின்றன. ஆனால் இன்று அது இல்லாமல் போய் உள்ளது.
அதற்கு இன்று மலையகத்தில் உள்ள பெரும்பான்மை அங்கத்தவர்களை கொண்டுள்ள தொழிற்சங்கங்களும் பொறுப்பு கூற வேண்டும். எமது மக்கள் போதியளவு வறுமானம் மற்றும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் பெற்றுக்கொடுக்காத காரணமாகவே இன்று அவர்கள் அடிமை தொழிலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதே.
எனவே தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காணியுரிமை,நில உரிமையினை பெற்றுக்கொடுக்க இந்த தொழிற்சங்கங்கள் இதனை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம் Cineulagam
