அரசியல் கட்சியினர் எனது வீட்டை தாக்கினர்:பொலிஸ் மா அதிபர் இரட்டை விளையாட்டுகாரர்
பொலிஸ் மா அதிபர் இரட்டை விளையாட்டுகாரர் எனவும் அவர் சரியாக தனது கடமையை செய்யவில்லை என்றால், அது சம்பந்தமாக முடிவு ஒன்றை எடுக்குமாறும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள போரட்டங்கள் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ரொஷான் ரணசிங்க சில தினங்களுக்கு முன்னர் தான் வகித்து வந்த ராஜாங்க அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பொலன்நறுவையில் உள்ள அவரது வீட்டின் மீது நேற்று தாக்கல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலை அடிப்படையாக கொண்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரொஷான் ரணசிங்க, எனது வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தாக்குதல் நடப்பதற்கு முதல் எனக்கு தகவல் வழங்கினர். தாக்குதல் நடத்தப்படும் என அறிந்தும் எனது வீட்டின் பாதுகாப்புக்காக 13 பொலிஸார் மாத்திரம் வழங்கப்பட்டிருந்தனர்.
தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் நான் அது பற்றி அறிவிக்க பொலிஸ் மா அதிபரை 13 முறை தொடர்புக்கொண்டு பேச முயற்சித்தேன், எனினும் அவரை தொடர்புக்கொள்ள முடியவில்லை.
நேற்று என் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியவர்கள், தேசிய மக்கள் சக்தி, முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தொடர்புடையவர்கள் எனவும் ரொஷான் ரணசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
ரொஷான் ரணசிங்க தமது அணியுடன் இணைந்து நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட போவதாக அனுர பிரியதர்ஷன யாப்பா அறிவித்தமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ரணசிங்க,
தான் சுயாதீனமாக செயற்படுவது தொடர்பாக இந்த சந்தர்ப்பத்தில் முடிவு செய்ய போவதில்லை என நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.