ஈரான் போர் மூலம் வெளிப்பட்ட பிரிக்ஸ் அமைப்பின் எல்லைகள்
புதுடில்லியில் நிறைவடைந்த பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அமைப்பின் விரிவாக்கம் குறித்து விவாதிக்கப்பட்ட போதிலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது மேற்கொண்டு வரும் போரைக் கண்டித்து நேரடி அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படாமை அமைப்பின் புவிசார் அரசியல் எல்லைகளை வெளிப்படுத்தியுள்ளது.
11 உறுப்பு நாடுகளையும் 10 பங்களிப்பு நாடுகளையும் கொண்ட பிரிக்ஸ் அமைப்பில், ஈரான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய இரு நாடுகளும் அங்கம் வகிக்கின்றன.
எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான பிராந்தியப் போட்டியும் பாதுகாப்பு குறித்த மாறுபட்ட நிலைப்பாடுகளும், அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக அமைப்பாக இணைந்து குரல் கொடுப்பதற்குப் பெரும் தடையாக அமைந்துள்ளன.
இராணுவ மோதல்
அத்துடன், இந்தியாவைப் பொறுத்தவரையில் பிரிக்ஸ் அமைப்பை அமெரிக்காவிற்கு எதிரான கூட்டணியாகப் பார்க்காமல், தனது மூலோபாய சுயாட்சியைப் பேணுவதற்கான ஒரு தளமாகவே கருதுகின்றது.

சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் அமெரிக்காவுடன் நேரடி இராணுவ மோதல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து, பல்துருவ உலக அமைப்பை நோக்கிய மெதுவான மாற்றங்களையே விரும்புகின்றன.
எனவே, பிரிக்ஸ் அமைப்பு அமெரிக்கா தலைமையிலான உலக அமைப்பை உடனடியாகத் தகர்க்கும் ஒரு இராணுவ அல்லது அரசியல் கூட்டமைப்பாகச் செயற்பட முடியாது என்றபோதிலும், டொலர் அல்லாத வர்த்தகம், மேம்பாட்டு நிதியுதவிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் சீர்திருத்தங்கள் மூலம் உலகளவில் ஒரு பலமிக்க பேச்சுவார்த்தைக் கூட்டணியாகத் தொடர்ந்தும் செல்வாக்குச் செலுத்தும் எனக் கருதப்படுகின்றது.