ரணிலின் பொன்முடி யாரின் கையில்!!
இலங்கைத்தீவு மிக விரைவில் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது.
இந்த நிலையில் வலைத்தளங்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு ஜேவிபியின் தலைவர் அனுரா குமார திசா நாயக்காவுக்கு பேராதரவு இருப்பதான ஒரு தவறான, நடைமுறைக்கு ஒவ்வாத முடிவை கொடுத்திருக்கிறது.
இந்த மாயைத் தோற்றத்தை நம்பி பலதரப்பட்ட ஆய்வாளர்களும், ஊடகங்களும் தந்தம் கட்புலக் காட்சிக்கு ஏற்றவாறு பெரும் அக்கப்போரை நடத்துகின்றன.
மேற்குலகத்தினால் சிம்மாசனத்தில் ரணில்
மேற்குலகத்தினால் சிம்மாசனத்தில் ஏற்றப்பட்ட ரணில் விக்ரமசிங்காவை அவர் இறக்கும் வரைக்கும் அதிலிருந்து அகற்ற முடியாது.
அவ்வாறு அகற்ற ராஜபக்சக்களை மேற்குலகம் ஒருபோதும் அனுமதிக்காது. இந்தப் பின்னணியில் சில தினங்களுக்கு முன் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய பசில் ராஜபக்ச "எங்கள் குடும்பத்திலிருந்து யாரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள்" என அறிவித்து விட்டார்.
இந்த அறிவிப்பானது ரணிலை சிம்மாசனத்தில் தொடர்ந்து வைக்க மேற்குலகமும், சிங்கள பௌத்த ஆளும் குழமும் முடிவெடுத்து விட்டன என்பதனையே சுட்டி நிற்கிறது.
அதாவது ரணிலின் பொன்முடி இப்போது ராஜபக்சேக்களின் கையிலும், மேற்குலகத்தின் கையிலுமே உள்ளது. மேற்குலகம் ரணிலுக்கு ஆதரவானது.
ஆனால் ராஜபக்ச மேற்கிற்கு எதிரானவர்கள் ஆனாலும் எதிரான இரண்டு தரப்புகள் ஒன்றிணைந்து ரணிலுக்கு முடிசூட்டுகின்றன. இந்த வினோதமான அரசியல் பக்கங்களை அறிவார்ந்தம், தத்துவார்த்தம் சார்ந்தும் புரிந்து கொள்ள வேண்டும்.
சிங்கள பௌத்தர்களுக்கும், ராஜபக்ச குடும்பத்தினருக்கும் கோத்தபாய ராஜபக்ச முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் மூலம் வெல்லப்பட முடியாத விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடித்து அழித்து இரண்டாக உடையவிருந்த இலங்கை தீவை தனது வெற்றியின் மூலம் ஒருங்கிணைத்து சிங்களாதேசத்திற்கு பெரும் யுத்தவெற்றியை பெற்றுக் கொடுத்தார்.
அதன் மூலம் சிங்கள பௌத்தர்களின் புனித நூலும் வரலாற்று நூலான மகாவம்சத்தில் தன் பெயரை நவீன தொட்டகைமுனுவாக பொறித்துக்கொண்டாார். இதனை 2000-ம் ஆண்டு தேர்தலின் போது "நீங்கள் தேடிய தலைவன் நானே" சிங்கள மக்கள் மத்தியில் கர்ச்சித்தார்.
பொருளாதார நெருக்கடி
அதையடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் இலங்கை தீவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அவரால் முகம் கொடுக்க முடியவில்லை.
ஆயுதங்களுக்கு ஆயுதங்களால் பதில் கொடுத்தவர் பொருளாதார நெருக்கடிக்கு ஈடு கொடுக்க முடியாமல் வெறும் 5000 மக்கள் நடத்திய அறகலைய போராட்டத்தின் முன் நின்று பிடிக்க முடியாமல் நாட்டை விட்டு தப்பி ஓடி பதவியைத் பதவி துறந்தார்.
ராஜபக்ச குடும்பத்திற்கு போரின் மூலம் பெற்றுக் கொடுத்த மகோன்னத கௌரவத்தை சிங்கள மக்களின் பொருளாதாரத்தின் மீது கை வைத்தபோது பதவியில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.
உண்மையில் அரகலையப் போராட்டத்தை ராஜபக்சவால் இலகுவில் அடக்கி ஒடுக்கியிருக்க முடியும். சிங்கள மக்கள் மீது ஆயுதப் பிரயோகம் மேற்கொள்ளக் கூடாது என்ற கண்டிப்பான மேற்குலகின் கட்டளையை அவரால் மீற முடியவில்லை.
அவ்வாறு மீறி இருந்தால் மேற்குலகத்தால் போர் குற்ற விசாரணைக்கு உட்பட்டு இருப்பார். அதனாலேதான் ஒரு சிறிய கூட்டத்தின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கண்டு அவர் பதவி துறக்க நேர்ந்தது.
இன்றைய உலகின் அரசியல் பொருளியலில் ஒரு உலகளாவிய முறைமை(Global system) என்பது நிலையாக நிலவி வருகிறது. இந்த முறையை மேற்குலகமே நிர்மாணித்தது இந்ததகைய முறைமைக்குள் ஒரு சர்வதேச ஒழுங்கு(International order) உண்டு.
இதன் சட்டாம்பிள்ளை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமே. இந்த சர்வதேச ஒழுங்கில் அவ்வப்போது மாற்றங்களை செய்ய அல்லது இந்த உலகிற்கு சவால் விடக்கூடிய நிலைமைகள் தோன்றுகின்ற போது மேற்குலகம் அதற்கான மூலகாரணிகளை அழிப்பதிலும், முடக்குவதிலும், கட்டுப்படுத்துவதிலும் முனைப்பாக ஈடுபடும். அந்த அடிப்படையில் இன்றைய சர்வதேச ஒழுங்கை தொடர்ந்து பேணுவதற்கு இந்துசமுத்திரத்தை தமது கட்டப்பாட்டில் வைத்திருப்புது அவசியம்.
சீனாவின் பிரசன்னம்
இந்துசமுத்துவத்தை தொடர்ந்து நமது மேலாண்மைக்குள் வைத்திருக்கவே மேற்குலகம் விரும்பும். சமுத்திரத்தை தனது மேலாண்மைக்குள் வைத்திருப்பதற்கு இந்தியா இன்றியமையாதது.
எனினும் தேவைக்கு தேவைக்கேற்றவாறு இந்தியாவை கூட்டாகவும் இந்தியாவை தவிர்த்தும் மேற்குலகம் தனது மேலாண்மையை தொடர்ந்து இந்து சமுத்திர பிராந்தியத்தில் நிலைநாட்டி வருவதை கடந்தகால வரலாறு நிரூபிக்கிறது. இப்போது இலங்கை தீவிலும் இந்து சமுத்துவத்தின் பல்வேறு பகுதிகளிலும் சீனாவின் பிரசன்னம் அதிகரித்து வலுவடைந்து வருக்கின்றது.
இந்நிலையில் இந்து சமுத்திரத்தின் மையப் பகுதியில் உள்ள இலங்கைத்தீவில் சீனா நிலையடுத்து இருக்கின்ற நிலையில் இலங்கைத்தீவை கட்டுப்படுத்தவும், அதனுடைய ஆட்சியாளரை தனக்கு சார்பாக சிம்மாசனத்தில் அமர்த்தவும் மேற்குலகம் அனைத்து வழிமுறைகளையும் செய்து வருகிறது.
இந்நிலையில்தான் அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு மீண்டும் வந்த பசில் ராஜபக்ச தமது தரப்பில் யாரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என அறிவித்திருக்கிறார்.
இதற்கு பின்னே மேற்குலகத்தின் கை வலுவாக உள்ளது என்பது தெரிகிறது. எனவே இலங்கை தீவில் நடக்கவிருக்கும் தேர்தலின் வெற்றி நாயகர் ரணிலைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது.
ஆனாலும் அதற்கான வாய்ப்புகள் பற்றி சற்று விரிவாக பார்க்க வேண்டியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இப்போது பொதுஜன பெரமுன (மொட்டு கட்சியாக) பரிணாமம் பெற்றுவிட்டது.
ராஜபக்சக்களின் தலைமையில் சுதந்திரக் கட்சியில் இருந்தவர்கள் பெரும்பான்மையானவர்கள் மொட்டு கட்சிக்குள் இப்போது இருக்கிறார்கள்.
இதனை சிங்கள சமூகம் தமது பழைய நிலைமையில் இருந்து ஒரு புதிய நிலைமைக்கு தங்களை மறு நிர்மாணம் செய்திருக்கின்றது என்றே சொல்ல வேண்டும்.
இலங்கை தேர்தல் அரசியலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு நிலையான முப்பது வீத வாக்குகள் எப்போதுமே உண்டு. அந்த வாக்குகள் அப்படியே இப்போது மொட்டு கட்சியின் பக்கம் சென்று விட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியும் சீரழிவு
அதேநேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் சீரழிவுக்கு உட்பட்டு அதிலிருந்து புதிய கிளை ஐக்கிய மக்கள்சக்தி சஜித் தலைமையில் தோன்றி வளர்ந்து விட்டது.
சஜித் தலைமையினை சிங்கள ஆளும்குழாமும், உயர்சாதி வர்க்கமும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. ஆகவே சஜித் தாழ்த்தப்பட்ட சிங்கள சமூகத்தின் வாக்குகளையே அவரால் பெற முடியும்.
ஆனால் ரணிலுக்கு பின்னால் சிங்கள தேசத்தின் உயர் குழாமும், மகாசங்கமும் பின்னே நிற்பதனால் எது எப்படி இருப்பினும் 15 வீதத்துக்கு குறைவான வாக்குகளை இன்றைய நிலையில் ராஜபக்சர்களுடன் கூட்டு சேர்வதனால் ரணினால் பெற்றுக் கொள்ள முடியும்.
எனவே இப்போது ராஜபக்சக்கள் அணியில் ரணில் இருந்து கொண்டு 45 வீத வாக்குகளை பெற முடியும்.
ஆனாலும் ஜனாதிபதி தேர்தலில் ஐம்பது வீதத்துக்கு மேல் என்கின்ற அறுதிப் பெரும்பான்மை வாக்கை இவர்களால் அறுவடை செய்ய முடியாது.
சிங்கள தேசத்தின் அரசியலில் ஒரு கட்டமைக்கப்பட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட, நேர்த்தியான ஆர்ப்பாட்டங்களையும், மக்கள் போராட்டங்களையும், பெரும் கூட்டங்களையும் ஜேவிபியினரால் செய்து காட்ட முடியும்.
அது கவர்ச்சிகரமானதாகவும் தோன்றும். ஏனெனில் அவர்கள் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமது மாணவர் அமைப்புகளை வலுவாக கட்டமைத்திருக்கிறார்கள்.
தொழிற்சங்கங்களையும் தமது கட்டுப்பாட்டுங்கள் வைத்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் அவர்களால் ஆர்ப்பாட்டங்களையும் பெரும் கூட்டங்களையும் நடத்த முடியுமே தவிர அதனை நாடு தழுவிய ஒரு வாக்கு திராட்சியாக திரட்டிவிட முடியாது.
ஏனெனில் ஜேவிபிக்கு பின்னே சிங்கள சமூகத்தில் உள்ள கறவ, துறவ, சலாகம சாதியினரும் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே உள்ளனர்.
இவர்கள் இலங்கையின் வாக்காளர் தொகையில் 20 விகிதத்தினரே. எனினும் இந்த 20 விகிதத்தில் இவர்களுக்கு வாக்களிப்பவர்கள் என்று பார்த்தால் வரும் 14 விகிதத்தினரே வாக்களிக்கின்றனர்.
இது கடந்த கால வாக்களிப்பு புள்ளிவிவர தொகுப்புகளில் இருந்து பார்க்க முடியும். "பாம்பாட்டிக்கும் வெள்ளிதிசை என்றால் நாலு பாம்பு கூட கிடைக்குமே தவிர புதையல் கிடைக்காது" என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.
ஜேவிபியின் வாக்கு வங்கி
இந்த அடிப்படையில்தான் ஜேவிபியின் வாக்கு வங்கியை அளவுகோலால் அளக்க வேண்டும். எனவே ஜேவிபி யினால் எத்தகைய வேஷங்களும், குத்துக்கரணங்களும் அடித்தாலும் அவர்களுக்கு அறுதியும், இறுதியுமாக பெறக்கூடிய கூடிய வாக்கு 14 விகிதமே அதை ஒருபோதும் அவர்களால் தாண்ட முடியாது.
அதற்கு அதற்கு மேல் சிங்கள சமூகத்தில் இந்த எந்த வாய்ப்புகளும் இன்றைய சூழலில் இல்லை. எதிர்காலத்திலும் இல்லை.
அது மாத்திரமல்ல தீவிர தமிழின எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு என்ற கொள்கையில் கட்டமைக்கப்பட்ட ஜேவிபி அண்மையில் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டு இந்திய ஆதரவுக் கரம் நீட்டியதான நிகழ்வுக்கு பின்னே இந்த கட்சிக்கு அதிதீவிர இந்திய எதிர்ப்பு வாதிகளும், தமிழினை எதிர்ப்பு வாதிகளும் எவ்வாறு தொடர்ந்து வாக்களிப்பர்? இவர்களை இந்தியா அழைத்ததன் மூலம் இவர்களுக்கு கிடைக்கக்கூடிய வாக்கு வங்கியை மேலும் கீழ்நோக்கித் தள்ளி விடக் கூடிய நிலைமையே தற்போது தோன்றியிருக்கிறது.
அப்படியானால் 45 வீத வாக்குகளை ராஜபக்சேக்களும் ரணிலும் பெற்றுக் கொண்டால் மிகுதி 55 வீத வாக்குகளுக்குள் தமிழ் மக்களுடைய வாக்குகளும் உண்டு. இந்த வாக்கு ஒரு தோராயமாக 8 தொடக்கம் 10 எனக் கொண்டால் தமிழ் மக்கள் ஒரு புது வேட்பாளர் நிறுத்தி தமிழ் மக்கள் அனைவரையும் அவருக்கே வாக்களிக்க செய்தால் சிங்கள தலைவர்களுக்கான வாக்கு விகிதம் வீழ்ச்சி அடையும்.
இவ்வாறு மிக குறைந்த அளவு வாக்குகளைத்தான் சஜித் அனுரகுமார திசநாயக்க மற்றும் தேர்தலில் போட்டியிடும் பலரும் பிரித்துப் பெற்றுக் கொள்வார்கள்.
எனவே இலங்கை அரசு தலைவர் தேர்தலில் யாரும் அறுதிப்பெரும்பான்மையை முதல் சுற்றில் பெற்றுவிட முடியாது. எனவே இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கைக்குச் சென்றுதான் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டிவரும்.
இந்த நிலையில் தமிழ் மக்கள் வாக்கு யாருக்கு என்ற அடிப்படையிலேயே அறுதிப் பெரும்பான்மையை பெறமுடியும். எனவே தமிழ் மக்கள் ரணிலுக்கு வாக்களித்தால் மாத்திரமே ரணில் 50% மேலான வாக்குகளை பெற்று வெற்றி பெறமுடியும்.
இல்லையேல் இரண்டாம் மூன்றாம் சுற்று வாக்கு எண்ணப்பட்டுத்தான் இலங்கை அரசு தலைவரை தேர்வு செய்ய முடியும். இது ஒரு மக்கள் ஆதரவு அற்ற ஒரு பலவீனமான தலைவர் என்பதை உலகத்துக்கு வெளிக்காட்டி நிற்கும்.
ஐநாவிலும், வெளிபரப்புகளிலும் கூக்குரல்
அத்தோடு தமிழ் மக்களால் சிங்கள தேசத்தின் தலைவரை தேர்ந்தெடுப்பதில் செல்வாக்கு செலுத்த முடியும் என்பதோடு சிங்கள தலைவர்களை தோற்கடித்தவர்கள் என்பதையும் நிலை நாட்ட முடியும்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தமிழ் மக்களுக்கு ஒரு சவாலான காலம். இந்தத் தேர்தலை சிங்கள தேசத்தின் தலைமைத்துவ போட்டிகளுக்குள்ளும், சிங்கள தேசத்தின் உடைவுகளுக்குள்ளும், பலவீனங்களுக்குள்ளும் தமிழ் மக்கள் தமக்கு சாதகமான பொறிமுறையை தெரிவு செய்து சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சி அதிகாரத்திடம் இருந்து தமக்கான அரசியல் உரிமைகளை பெறுவதற்கான பேரம் பேசலகளுக்கு இப்போது வாய்ப்பு இருக்கிறது.
அவ்வாறு பேரம் பேசலுக்கு வாய்ப்பு இல்லை என்ற கருதும் பட்சத்தில் வட்டுகோட்டை தீர்மானம் எவ்வாறு 1977ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஒரு மக்கள் ஆணையாக பிரகடனப்படுத்தப்பட்டதோ அவ்வாறே இந்த ஜனாதிபதி தேர்தலையும் தமிழ் மக்கள் தமது பொது கோரிக்கைகளை முன்வைத்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அவருக்கு வாக்களிப்பதன் மூலம் தமது மக்கள் ஆணையை வென்றெடுக்க முடியும்.
வெறுமனே இலங்கை தீவுக்குள் நடத்த முடியாத, இலங்கையரசு அனுமதிக்காத ஒரு சர்வதேச தலையீட்டுடனான தமிழ் மக்கள் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பை நடத்தும்படி ஐநாவிலும், வெளிபரப்புகளிலும் கூக்குரல் இடுவதை விடுத்து இந்தத் தேர்தலை தமிழ் மக்களின் கருத்துக்கணிப்பாக ஒரு மக்கள் ஆணையாக தேர்தலில் முன் வைத்து போட்டியிட்டு தமிழ் மக்கள் தமது மக்கள் ஆணையை இந்த ஜனாதிபதி தேர்தலின் மூலம் நிறுவ முடியும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 15 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.