கோட்டாபயவிற்காக பதவியை இராஜினாமா செய்ய தயாராகும் நாடாளுமன்ற உறுப்பினர்! வெளியான அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வர விரும்பினால், தனது பதவியை இராஜினாமா செய்யத் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இதுவரையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவோ அல்லது வேறு யாரோ அவ்வாறான எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வந்தடைந்தார் கோட்டாபய ராஜபக்ச
இதேவேளை,பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் காரணமாக இலங்கையிலிருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
தாய்லாந்திலிருந்து சிங்கப்பூர் வழியாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த கோட்டாபய ராஜபக்ச பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அரசாங்கத்தினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றடைந்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்படும் வரப்பிரசாதம்
நாடு திரும்பியுள்ள கோட்டாபய ராஜபக்சவுக்கு, முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் வரப்பிரசாதம் என்பன வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கு அமைவாக பிரமுகர் பாதுகாப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கோட்டாபய ராஜபக்ச தனது வாக்கு பலத்தை தக்கவைத்துக்கொள்ள ராஜபக்சக்கள் சார்பாக அரசியலில் ஈடுபடுவார் எனவும், அரசாங்கத்தை மீண்டும் கைப்பற்றினால் மாத்திரமே ராஜபக்சக்களை பாதுகாக்க முடியும் என்ற நிர்ப்பந்தத்தில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எனினும் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் இதுவரை எந்தவொரு அறிவிப்பினையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.