ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன் பரபரப்பு : ஒன்று கூடிய பொலிஸாரின் குடும்ப உறுப்பினர்கள்
பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருக்கும் உத்தியோகப்பூர்வ இல்லங்களில் இருந்து வெளியேறுமாறு பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன் ஒன்று கூடிய குடும்ப உறுப்பினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
பொலிஸ் மா அதிபரினால் ஐந்து வருடங்களுக்கு மேல் உத்தியோகப்பூர்வ இல்லங்களில் வசிப்பவர்கள் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் அவற்றை ஒப்படைக்குமாறு வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மகஜர் ஒன்றை கையளிக்க வந்திருந்த பொலிஸாரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் பொலிஸாருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன் பின்னர் ஜனாதிபதியின் பிரதிச் செயலாளரை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
பொலிஸ் மா அதிபரின் சுற்றறிக்கை
இந்த பிரச்சினை தொடர்பில் சட்டத்தரணி அமில கொடமாவத்த தெரிவிக்கையில்,
இந்த உத்தியோகப்பூர்வ இல்லங்களில் வசிப்பவர்களில் சிலரின் பிள்ளைகள் கொழும்பு பாடசாலைகளுக்கு செல்கின்றனர். அவர்களில் சில பிள்ளைகள் க.பொ.த.சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சை எழுதுபவர்களாக உள்ளனர்.
மேலும் சிலர் தங்களின் கிராமத்தில் இருந்து வந்து கொழும்பில் நிரந்தரமாக வசிப்பவர்கள். இவர்கள் திடீரென செல்ல முடியாத நிலைமையில் இருக்கின்றனர்.

அத்தோடு பொலிஸார் ஒருவருக்கு கிடைக்கும் சம்பளத்தில் கொழும்பில் வாடகைக்கு வீடு எடுப்பது முடியாத காரணமாகும். இவற்றை கருத்தில் கொண்டு சலுகை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோட்டுக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.