பொலிஸ் உத்தியோகத்தர்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள்! விடுக்கபட்டுள்ள எச்சரிக்கை
பொலிஸ் உத்தியோகத்தர்களது புகைப்படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடக வலைத்தளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நிதி முறைகேடுகள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் பொலிஸ் திணைக்களம் ஒரு விசேட அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடக வலைத்தளங்களில் மோசடி நபர்களால் செய்யப்படும் நிதி மோசடிகள் குறித்து ஏராளமான முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும், இது தொடர்பாக பொலிசார் விசாரணைகளை நடத்தி, பல சந்தர்ப்பங்களில் பல்வேறு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொலிசார் எச்சரிக்கை
போலி வட்ஸ்அப் கணக்குகள், டெலிகிராம் கணக்குகள் போன்றவற்றைப் பயன்படுத்தியும், போலி பொலிஸ் உத்தியோகத்தர்களின் புகைப்படங்களைக் கொண்டு கணினிகள் அல்லது கைபேசிகள் மூலம் மக்களை ஏமாற்றியும் செய்யப்படும் நிதி மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்கள் அதிகரித்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொலிசாரின் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுபோன்ற மோசடிச் செயல்களைச் செய்யும் தனிநபர்கள் அல்லது குழுக்களிடம் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று பொலிசார் திரும்பவும் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், இதுபோன்ற விடயங்களில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அந்த அறிவிப்பில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.