கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த பொலிஸார் (Photos)
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்தில் மூன்றாவது நாள் அகழ்வாய்வுகள் நேற்று (08) இடம்பெற்று வந்த நிலையில், அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளரின் கடமைக்கு பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியதுடன், குறித்த ஊடகவியலாளர்களை பொலிஸார் அச்சுறுத்தியுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு நீண்ட தூரத்திலிருந்து (கொக்கிளாய் பிரதான வீதியில்) இருந்தே செய்தி சேகரிக்க வேண்டுமெனவும் ஊடகவியலாளர்களை பொலிஸார் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.
பொலிஸார் அச்சுறுத்தல்
மனிதப்புதைகுழி அகழ்வு தொடர்பில் ஏற்கனவே இடம்பெற்ற கலந்துரையாடல்களில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பதற்கு அனுமதியளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரின் இத்தகைய அடக்குமுறைச் செயற்பாடு ஊடகவியலாளர்களுக்கு அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை இரண்டாவது நாள் அகழ்வாய்வின்போது ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இவ்வாறான சூழலில் மூன்றாவது நாள் அகழ்வாய்வில் ஊடகவியலாளர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல் வழங்கி, அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரித்தமை, குறித்த அகழ்வுப்பணி தொடர்பில் பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஊடகவியலாளர்களின் கடும் பிரயத்தனத்தின் பின்னர், இந்த விடயம் நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.