வவுனியாவில் முச்சக்கரவண்டிக்குள் இருந்த பணம் திருட்டு - பொலிஸார் தீவிர விசாரணை
வவுனியா, மன்னார் வீதியில் உள்ள கல்வி நிலையம் முன்பாகவுள்ள ஒழுங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றுக்குள் இருந்த 30 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, மன்னார் வீதியில் உள்ள கல்வி நிலையம் ஒன்றின் முன்னாலுள்ள ஒழுங்கையில் உள்ள பந்தல் சேவை முன்பாக நேற்று மாலை (26.04) தனது முச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு அருகிலிருந்த கடை ஒன்றுக்குச் சென்று , மீண்டும் திரும்பி வந்த முச்சக்கரவண்டி சாரதி தனது முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்றுள்ளார்.
சிறிது தூரம் சென்ற பின்னர் முச்சக்கரவண்டியின் பெட்டியைப் பார்த்த போது அது திறக்கப்பட்டு பின்னர் மூடியிருந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து முச்சக்கரவண்டி பெட்டியைத் திறந்து பார்த்த போது அதிலிருந்த 30 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த முச்சக்கரவண்டி நிறுத்திய இடத்தில் காணப்பட்ட சிசீரீவி காணொளிகளை பார்வையிட்ட போது பிறிதொரு முச்சக்கரவண்டியில் வந்த மூவர் வேறு சாவி ஒன்றைப் போட்டு முச்சக்கரவண்டி பெட்டியைத் திறந்து பணத்தை எடுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சாரதி வவுனியா பொலிஸில் முறைப்பாடு
செய்துள்ளார். பொலிஸார் சிசீரீவி காணொளி உதவியுடன் தீவிர விசாரகைளை
முன்னெடுத்துள்ளனர்.