மூவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக அறிவிக்கவும்! பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்
மிதிகம பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்கள் மூவரை தேடும் நடவடிக்கையில் இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
இதன்படி, கடந்த மார்ச் மாதம் மிதிகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உணவக உரிமையாளரைக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூவரைத் தேடுவதற்கு உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கைது
மார்ச் 29 அன்று வாகனத்தில் வந்த அடையாளந்தெரியாத நபர்களால் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் அவரது உணவகத்திற்கு முன்னால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறை குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பிரிவினரால் நால்வர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது.
உடனடியாக அறிவிக்கவும்
இதன்போது, மேலும் மூவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டிருக்கக் கூடும் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பிரிவு, சந்தேகநபர்கள் மூவரின் படங்களையும் வெளியிட்டதுடன், மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகரை 071 859 2910 அல்லது கிளையின் பொறுப்பதிகாரி 071 859 6406 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை கோரியுள்ளது .
