இளைஞனிடம் தங்கச் சங்கிலி பறிப்பு:பொலிஸார் கைவரிசை
கொட்டாவை பாடசாலை சந்திப் பகுதியில் இளைஞர் ஒருவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் ஐ.போன் ரக தொலைபேசி ஆகியவற்றை கொள்ளையிட்டனர் என்ற குற்றச்சாட்டில் மாலபே பொலிஸ் நிலையத்தை சேர்ந்த நான்கு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொட்டாவை பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர். ஒரு பொலிஸ் சார்ஜன்ட் முன்று பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் மாலபே பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டவர் என பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டி, கொள்ளையிடப்பட்ட தங்கச்சங்கிலி மற்றும் ஐ போன் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
வீதியில் நின்ற இளைஞனிடம் கொள்ளையிட்ட பொலிஸார்
வலஸ்முல்ல வீரகெட்டிய பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 20 ஆம் திகதி கொட்டாவை பாடசாலை சந்தியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்து, வீட்டுக்கு எதிரில் உள்ள வீதியில் இருந்துள்ளார்.
அப்போது முச்சக்கர வண்டியில் வந்த சந்தேக நபர்கள் இளைஞனுக்கு அருகில் சென்று தங்கச் சங்கிலி மற்றும் ஐ போனை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் ஹோமாகமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.