கோட்டா கோ ஹோம் போராட்டம்! கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றுக்கு பாரப்படுத்தப்பட்ட மனு!
கோட்டா கோ ஹோம் போராட்டம் காரணமாக ஜனாதிபதி செயலகத்தின் நுழைவு வீதிக்கு ஏற்பட்டுள்ள தடைகளை அகற்றுமாறு பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட மனு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மனுவை எதிர்வரும் மே மாதம் 10 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஷாலனி பெரேரா உத்தரவிட்டுள்ளார்
சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக கோட்டை பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பான நீதவான் விசாரணைகளை விசாரணை செய்வதிலிருந்து விலகிக்கொள்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல நேற்று தீர்மானித்தார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரே ஆர்ப்பாட்டக்காரர்களால் ஏற்படும் இடையூறுகள் தொடர்பில் விண்ணப்பம் செய்ய தயார் என கோட்டை பொலிசார் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி ஷவீந்திர விக்ரம தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவருக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் உபுல் ஜயசூரிய உள்ளிட்ட சட்டத்தரணிகள், மனுதார்களின் கோரிக்கைக்கு எதிராக ஆட்சேபனைகளை எழுப்பியதுடன், பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்த காணொளி காட்சிகளை பார்வையிட அனுமதிக்குமாறு நீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர்.
இதனை கருத்திற்கொண்ட மேலதிக நீதவான் ஷாலினி பெரேரா, எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் விசாரிப்பதற்காக இந்த வழக்கை பாரப்படுத்த உத்தரவிட்டார்



