ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பொலிஸ் பாதுகாப்பு நீக்கம்
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பொலிஸ் பாதுகாப்பு வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றம் என்பனவற்றினால் ஞானசார தேரரை உடனடியாகக் கைது செய்யுமாறு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் விலக்கிக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராஜகிரிய, நாவல வீதியில் அமைந்துள்ள சத்தர்ம ராஜிக விகாரையில் வசித்து வரும் ஞானசார தேரருக்கு 'குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகாரசபையினால்' இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, வெலிகடை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பகல் மற்றும் இரவு வேளைகளில் இவரது பாதுகாப்பிற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
2016 ஆம் ஆண்டு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் போது நீதிமன்ற அறைக்குள் பலவந்தமாக தலையிட்டு கருத்து வெளியிட்டமைக்காக, 2018 ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. எனினும், அந்தப் பொதுமன்னிப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், குறித்த ஜனாதிபதி பொதுமன்னிப்பை செல்லுபடியற்றதாக்கி, அவரை மீண்டும் சிறையிலடைக்குமாறு கடந்த 29 ஆம் திகதி உத்தரவிட்டது.
இது தவிர, இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தியமை தொடர்பில் கொழும்பு இலக்கம் 09 மேல் நீதிமன்றத்தில் நேற்று (30) விசாரணைக்கு வந்த வழக்கு விசாரணைக்கும் ஞானசார தேரர் முன்னிலையாகத் தவறியதனால், அவரை உடனடியாகக் கைது செய்யுமாறு மேல் நீதிமன்றமும் பிடியாணை பிறப்பித்துள்ளது.
நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ள ஒருவருக்கு 'குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு உதவி செய்தல் மற்றும் பாதுகாத்தல் சட்டத்தின்' விதிகளுக்கு அமைவாக தொடர்ந்து பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதற்கு சட்டரீதியான சாத்தியக்கூறுகள் இல்லாததால், அவரது விகாரைக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு முற்றாக விலக்கிக்கொள்ளப்பட்டு அதிகாரிகள் திரும்ப அழைக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.