சீருடையில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்
பொலிஸ் சீருடையில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர், 10 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிக்கடை பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபரின் சீருடை பையில் ஐஸ் போதைப் பொருள் இருந்ததாக அதிரடிப்படையினர் கூறியுள்ளனர்.
வெலிக்கடை பொல்வத்தை பிரதேசத்தில் 10 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் விசாரணை நடத்தும் போது, அவரது கையடக்க தொலைபேசிக்கு பொலிஸ் உத்தியோகஸ்தர் அழைப்பு எடுத்துள்ளார். தன்னிடம் 10 கிராம் ஐஸ் போதைப் பொருள் இருப்பதாகவும் ஒரு கிராம் ஐஸ் போதைப் பொருளை 12 ஆயிரம் ரூபாவுக்கு வழங்க முடியும் பொலிஸ் உத்தியோகஸ்தர் சந்தேக நபரிடம் கூறியுள்ளதாக அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
அதிரடிப்படையினர், கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மூலம் ஐஸ் போதைப் பொருளைக் கொள்வனவு செய்வதாகக் கூறி, பொலிஸ் உத்தியோகஸ்தரை ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள விடுதிக்கு வரவழைத்துள்ளனர்.
அங்கு போதைப் பொருளைக் கையளிக்கும் போது அதிரடிப்படையினர் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்படும் போது, சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகஸ்தர், பொலிஸ் சீருடையுடன் கைத்துப்பாக்கியைத் தன்வசம் வைத்திருந்ததாகவும், அதிரடிப்படையினர் கூறியுள்ளனர். சந்தேக நபர் 22 ஆண்டுகள் பொலிஸ் சேவையில் கடமையாற்றி வந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.